உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை ஆடை

29

பஞ்சு, பட்டு, மயிர் ஆகிய மூவகைக் கருவிப் பொருளாலும் ழைக்கப்பட்ட நுண்ணூலினால், பூவிதழ் போன்ற மென்மையும், இழை பிரித்தறியாச் செறிவும், பாம்புச் சட்டையும் மூங்கிற் சொலியும் நீராவியும் நறும்புகையும் ஒத்த நனிதவ நொய்ம்மையும், கண்கவர் பல்வண்ணப் பூத்தொழிலும், உடைய பல்வகை ஆடைகள் அறுவகைப் பருவத்திற்கும் ஏற்றவாறு நெய்யப்பட்டன. மயிர் என்றது, ஆட்டுமயிரையும் ஒருவகை எலி மயிரையும்.

ஊண்

உலகில் முதன்முதல் உணவை நாகரிகமாய்ச் சமைத்துண் டவன் தமிழனே.

உண்ணல் தின்னல் நக்கல் பருகல் என்னும் நால்வகை ஊண் வினையும் ஒருங்கே சேர்ந்தது சாப்பிடுதல்.

உணவைச் சோறும் குழம்பும் கறியும் என மூன்றாகப் பகுத்து, நெல்லரிசியைச் சோறாகச் சமைத்து, குழம்பையும் கறியையும் கண்ணிற்கு அழகும் மூக்கிற்கு நறுமணமும் நாவிற்கு இன்சுவையும் உணர்த்துவனவும், உடம்பை வலுப் படுத்து வனவும், நோய்வராது தடுத்து வாழ்நாளை நீட்டிப் பனவுமான பலவகை மருந்துச் சரக்குகளைச் சேர்த்து ஆக்கி, முதலிற் குழம்பும் இடையில் மிளகுநீரும் இறுதியில் தயிர் அல்லது மோரும் ஊற்றி, இயற்கையான மெல்லிய வாழையிலையில் அறுசுவை யுண்டி தொன்றுதொட்டு இன்பமாகச் சாப்பிட்டு வருபவன் தமிழனே.

அரிசி வகையில், நெல்லரிசி தலை; வரகு தினை சாமை குதிரை வாலி காடைக்கண்ணி ஆகியவற்றின் அரிசி இடை; கஞ்சி களி கூழுக்கு மட்டும் உதவும் சோளம் கம்பு கேழ்வரகு கடை.

நெல்லரிசியில் சீரகச் சம்பா சிறுமணிச் சம்பா என்பவை தலை; பிற சம்பா இடை; மட்டையரிசி கடை.

சோளம் கம்பு கேழ்வரகுண்ணும் பாட்டாளி மக்களும் சுவையான குழம்பும் தொடுகறியும் விரும்புவர்.

குழம்பிற் குதவும் பயற்று வகைகளுள், துவரை தலை; அவரை மொச்சை பச்சை இடை: உழுந்து தட்டான் கல் கரம்பை கொள் (காணம்) கடை.