பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 149 அவர் தேசியகவி பாரதியாரிடம் தமிழ் பயின்றவர் என்றும், கவிதை எழுதக் கற்றுக் கொண்டவர் என்றும், பாரதியாரின் மாணவர் என்றும் சிலர் கூறி வருவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். இது முற்றிலும் தவறு. திரு. பாரதிதாசனவர்கள் தேசியகவி பாரதியாரோடு தொடர்பு கொள்வதற்கு முன்பே, இலக்கிய இலக்கணங்களில் புலமை எய்தியிருந்ததோடு பாட்டு எழுதும் ஆற்றலும் பெற்றிருந்தவராவார். அவர் தமிழ் கற்றது, சாரம் மகாவித்துவான் திரு.பு.ஆ பெரியசாமிப் பிள்ளையவர்களிடமும், கல்வே காலேஜ் தமிழ்ப்பண்டிதர் திரு. பங்காருப் பத்தர் அவர்களிடமுமேயாகும். அப்பொழுதெல்லாம் திரு. பாரதிதாசன் அவர்களுடைய பாடல், எளிய நடையில் இராது. கடுநடை என்பார்களே, அந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கும். சுப்புரத்தின வாத்தியார் பாட்டா? அது கடுந்தமிழிலல்லவா இருக்கும்!’ என்று பலர்கூற, நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சியினரின் கெடுபிடிக்களாகிப் புதுவையில் தஞ்சமடைந்த அரவிந்தர், வ.வே. சு. அய்யர், சுப்பிரமணிய பாரதியார் போன்றவர்கட்கும், புதுவையிலுள்ள தேசிய உணர்வு கொண்ட பலர் ஆதரவாக இருந்து வந்தனர். அவர்களுள் ஒருவர் தான் திரு. பாரதிதாசன் அவர்களும். இனம் இனத்தோடு சேரும் என்பதுபோல், நாளடைவில் திரு. பாரதிதாசனவர்கள் தேசிய கவிபாரதியாரோடேயே நெருங்கிப் பழகலானார். ஏனெனில், இவரும் கவிஞர்; அவரும் கவிஞர். இது மட்டுமல்ல, அவர்கள் நெருங்கிப் பழகியதற்குக் காரணம், மற்றவர்களைக் காட்டிலும், சமத்துவ நோக்கமும் சீர்திருத்த உள்ளமும் பெற்றிருந்ததே ஆகும். அப்பொழுது திரு. பாரதியாரவர்கள், எளிய நடையிலேயே தம் பாடலை எழுதி வந்தார். இது புலவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், பாரதியார் பாடலைக் குறைகூறத் தொடங்கினர். ஏனெனில் பாட்டு என்பது கற்றவர்களால் அரிதாகப் பொருளுணரக் கூடிய திரிசொற்களைக் கொண்டுதான் எழுதவேண்டும் என்பது விதியாக இருந்தது. காலம் அந்த விதியை மாற்றிவிட்டதால், அந்த மாறுதலைப் பின்பற்றி எழுதலானார் பாரதியார். அதற்குமுன் நாட்டைப் பற்றிய கவலையில்லாமல், மக்கள் நலனைப் பற்றிய கவலையில்லாமல் வாழ்ந்து வந்தனர் புலவர்கள். அவர்கள் கவலையெல்லாம் பொழுது விடிந்தால் பொழுது போனால், ஆண்டவனைப் பற்றியும், அவனருள் பெறுவது பற்றியுமே இருந்து