பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நான் அறிந்த பாரதிதாசனார் இந்து தியலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் கட்டாய இந்தி வகுப்பு, ஒரு முன் மாதிரியாக நடந்து வந்ததால், அங்கே ஊர்வலமாகச் சென்று அந்தப் பள்ளியின் வாயிலிலேயே மறியல் செய்ய வேண்டும் என்னும் தீர்மானம் ஒன்றை எழுதிச் சிவஞானம் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொண்டு வருவதற்காக அன்று தலைமை தாங்கிய பேராசிரியர் மோசூர் கந்தசாமி முதலியாரிடம் காட்டினேன். அவர் நீங்கள் முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருப்பதால் இராசகோபாலாச்சாரியார் உங்கட்குப் பலவிதத்திலும் தொல்லை தருவார். நான் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாக இருப்பதால் என்னை அவரால் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறித் தாமே அதில் கையெழுத் திட்டு அந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார். அப்போது சி.டி.நாயகம், ஸ்டாலின் ஜெகதீசன், அறிஞர் அண்ணா, சுவாமி அருணகிரிநாதர் முதலிய பலரும் இருந்தனர். அண்ணா அவர்களும், சுவாமி அருணகிரிநாதர் அவர்களும் மிகவும் வன்மையாகக் கண்டித்துப் பேசினர். அதன் காரணமாகத்தான் அண்ணா அவர்களும், சுவாமி அருணகிரிநாதரும் முதன்முதலில் சிறைபுக நேர்ந்தது. பிறகு தொடர்ந்து வாரந்தோறும் காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து ஒரு பெரிய ஊர்வலம் புறப்பட ஆரம்பித்தது. அந்த ஊர்வலங்களை எல்லாம் நானே மறைமுகமாக இருந்து நடத்தி வந்திருக்கின்றேன். அவ்விதம் நான் மறைமுகமாக இருந்து நடத்தி வரவேண்டும் என்று என்மீது பேரன்பு வைத்திருந்த என் மாணவர்களும் நண்பர்களும் கேட்டுக் கொண்டனர். ஆதலால், அந்த ஊர்வலங்களில் இறுதியில் நான் நடந்து வருவது வழக்கம். அப்போது மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் என்னைத் தொடர்ந்து ஒருவர் வந்து கொண்டு இருந்தார். அவர் தம் மிடுக்கான பார்வையும் பெருமிதம் வாய்ந்த நடையும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஆதலால் என்னுடன் வந்த என் நண்பர்களும் ஒருவரை நோக்கி இவர் யார்?' என வினவினேன். "இவர்தான் பாரதிதாசன் என்பவர்; ஒரு சிறந்த கவிஞர். இவருடைய பாடல்களைத்தான் நமக்கு முன்னே செல்கின்ற தாய்மார்களும் பிறரும் பாடுகின்றனர்” என்றார். நான் இவருடைய அருமை பெருமைகளையெல்லாம் பல அறிஞர்கள் மூலம் கேட்டிருக்கின் றேன். எனினும் அன்றுதான் நேரில் கண்டேன். கவிஞருக்கு இருக்க வேண்டிய முகப்பொலிவு முற்றும் பொருந்தியிருத்தலைக்கண்டு நான் மிகவும் வியந்தேன்; எனினும் நான் அவரிடம் கலந்துரையாடவே இல்லை.