பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அந்தநாட்கள் இருக்க முடியாது. அந்நிகழ்ச்சி பற்றிப் பாவேந்தரே கூறுகிறார் கேளுங்கள்: "பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. நாகர்கோயிலில் ஒரு மாநாடு நடைபெற்றது. தமிழ் எழுத்தாளர் மாநாடோ. இலக்கிய மாநாடோ. எனக்குச் சரியாக நினைவில்லை. அம்மாநாட்டுத் தலைவர் டி.கே.சி. அதில் சீனிவாசராகவன் கலையைப் பற்றிப் பேசினார். மாநாடு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடைய திரைப்படக் கொட்டகையில் நடைபெற்றது. நான் என்.எஸ்.கே. வீட்டில் தங்கியிருந்தேன். அம்மாநாட்டில் காலை நிகழ்ச்சியாக எனது பேச்சு இருந்தது. தேசிக விநாயகம்பிள்ளை வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த இலக்கிய அறிஞர்களை வரவேற்றுப் பேசிய அவர் என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, புதுவைக் குயில் வந்திருக்கிறது. அது இங்கு அளவோடு கூவ வேண்டும். அதிகமாகக் கூவினால் கூண்டில் பிடித்து அடைத்து விடுவார்கள் என்று கூறினார். நான் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தேன். நான் பேசத் தொடங்குவதற்கு முன்பு தலைவர் எனக்கு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கியிருப்பதாகச் சொன்னார். நான் என்னுடைய தலைப்பைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு நான் புதுவையிலிருந்து வந்திருக்கிறேன். என் பேச்சுக்கு ஐந்து நிமிடமாம்; அதுவும் நான் ஜாக்கிரதையாகப் பேச வேண்டுமாம்; இல்லாவிட்டால் என்னைக் கூண்டில் அடைத்து விடுவார்களாம் என்று தொடங்கினேன். ஐந்து நிமிடம் ஆனதும் தேவி என்னை உட்காரும்படி கையமர்த்திக் காட்டினார். உடனே நான் கோபத்தோடு மேடையை விட்டு இறங்கி என்.எஸ்.கே. வீட்டுக்குச் சென்று விட்டேன். அங்கு திரளாகக் கூடியிருந்த மக்கள் நான் இறங்கிச் செல்லும்போது கூச்சலிட்டுத் தடுத்தனர். ஒரு பெருங்கூட்டம் எழுந்து என்னைத் தொடர்ந்து என்.எஸ்.கே. வீட்டுக்கு வந்து விட்டது. பகலில் மாநாட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் முடிவுற்றன. இரவு என்.எஸ்.கே.யின் கலை நிகழ்ச்சி நிகழவிருந்தது. திரளாகக் கூடியிருந்த மக்களைப் பார்த்துக் கலைவாணர், தோழர்களே! இந்நிகழ்ச்சிக்கு நான் தலைவன்: கவிஞர் பாரதிதாசன் சொற்பொழிவாளர். கவிஞர் பேசியது போக நேரம் மிச்சமிருந்தால் என்னுடைய கலை நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டார். மக்கள் எனக்கு வேண்டிய அளவு சிறப்புச் செய்தனர். மேசை நிறைய மாலைகள் குவிந்தன.