பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் சமூக சீர்திருத்தம், தன்னாட்சி ஆகியவற்றுக்கு இவருடைய பாட்டு வரிகளே பதாகைகளாகிப் பட்டொளி வீசிப் பறந்தன. பாரதிதாசன் திராவிட இயக்கத்துக்கு ஆற்றிய அருந்தொண்டுக்கு நன்றிக் கடனாகத் தமிழக அரசும், புதுவை அரசும் அவருக்குச் சிலையெடுத்துள்ளன; அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியுள்ளன; அவர் படைப்புக்களை அரசுடைமை ஆக்கியுள்ளன; அவர் பேரால் அறக்கட்டளைகள் நிறுவி நினைவுப் பரிசுகள் வழங்குகின்றன. ஆண்டுதோறும் விழா எடுத்துச் சிறப்பிக்கின்றன. ஆனால் இவர்கள் நன்றிக்கடன் இப்பணிகளோடு முற்றுப் பெறவில்லை. 'நடுவண் அரசின் அஞ்சல் துறை பாரதிக்கும், நாமக்கல் கவிஞருக்கும் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. மிகவும் காலங் கடந்து பாரதிதாசனுக்கு (2001 அக்டோபரில்) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. பாரதிதாசன் எழுதி வெளிவராத அவரது படைப்புகள் அவர் மகன் மன்னர் மன்னனிடம் இன்னும் உள்ளன. அவற்றை அச்சு வாகனத்தில் ஏற்ற, தமிழக, புதுவை அரசுகள் உதவு வேண்டும். பாரதிதாசனுக்குச் சிலையெடுப்பது, ஓரிலக்கம் நினைவுப்பரிசு வழங்குவது ஆகியவற்றைவிட, அவர் படைப்புகளை உலக மொழிகளில் பெயர்த்து உலகெங்கும் பரப்புவது மிகத் தேவையான பணி. இப்பணி தனிப்பட்ட ஒருவரால் செய்யக் கூடியதன்று. ஆங்கிலமும், பிரெஞ்சும், தமிழும் வல்ல தேர்ந்த மொழி பெயர்ப்பாளர் குழுவொன்றை அமர்த்தி இவ்விரு அரசுகளும் தான் இப்பணியைச் செய்ய வேண்டும். 9, 10, 2001இல் பாரதிதாசன் அஞ்சல் தலை புதுவையிலும் சென்னையிலும், சேலம் தமிழ்ச் சங்கத்திலும் வெளியிடப்பட்டது.