உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ஒளியூரில்‌

யிடம் சற்றுக் கௌரவமாகத்தானே பேசி வைக்கவேண்டும்! அதனை வணிகர் அறியாமலில்லை. அவர் பல மண்டலங்கள் சென்று வருகிறார். எங்கும் மாறுதல் உருவாகிக் கொண்டிருக்கிறது. எல்லா மண்டலங்களிலும் புத்தமதம் பரவிவிடவில்லை; இந்து மார்க்கத்தை விடாப்பிடியாகக் காப்பாற்றிக் கொண்டும், புத்த மார்க்கத்தினருக்குப் பல கொடுமைகள் இழைத்துக் கொண்டும் பல மண்டலங்கள் இருந்தன. என்றாலும், அங்கெல்லாம்கூட இந்து மார்க்கத்திலேயே காலத்துக்குப் பயந்து மாறுதல்கள் செய்து வந்தனர். பேரிரைச்சலுடன் ஓடிவரும் ஆற்றைத்தாண்டி அக்கரை செல்ல வேண்டுமானால், தட்டுமுட்டுச் சாமான்களையும் உடன் தூக்கிக் கொண்டா செல்ல முடியும்?

மகதம் இவ்வளவுக்கும் வழி செய்துவிட்டது என்று மறையவர்கள் அடிக்கடி ஆத்திரத்துடன் பேசுவர். அந்தப் பாப பூமியில்தான் இப்போது, கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டுள்ளனர் புத்த மார்க்கத்தினர். அங்கு புத்த மார்க்கத்துக்கான படிப்பும், பயிற்சியும் பெற்று, பாரெங்கும் சென்று பௌத்தத்தைப் பரப்பும் பண்டிதர்களைத் தயாரிக்கிறார்கள்.

புத்த மார்க்கத்தின் புனிதத்தைப் புகட்டும் ஏடுகள் அங்கு மலைமலையாகக் குவிந்து கிடக்கின்றனவாம். ஒரு பெரிய பல்கலைக்கழகமே ஏற்படுத்திவிட்டிருக்கிறார்கள்.

இவ்விதமாகவெல்லாம், அந்த மண்டலம் போய் வந்தவர்கள் வியந்து கூறுவர்; வைதீக மார்க்கக் காவலர்களுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும்.

“இவ்வளவுக்கும் ஆதரவு அளிக்கும், மகத நாட்டு மன்னன் ரௌரவாதி நரகமல்லவா போய்ச் சேருவான்?”

“அப்படி நாம் கூறுகிறோம்; நம்புகிறோம். அவர்கள் மோட்சம், நரகம் என்ற பேச்சே ஆரியச் சூழ்ச்சி என்கிறார்களே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/66&oldid=1769540" இலிருந்து மீள்விக்கப்பட்டது