78
ஒளியூரில்
இவை மீண்டும்! மீண்டும் மலர்ச்சோலையில் மணம், நீரோடையில் சிரிப்பொலி, மாலை வேளைகளில் மதுரகீதம், களிநடம் புரியலாயிற்று. மதகு திறந்ததும் பாய்ந்தோடும் வெள்ளம்போல் காதல் பெருக்கெடுத்தது!
“மகிழ்ச்சி, மகளே! அவரும் அறிவாளி; அவனும் பண்பாளன். ஏதோ இடையில் சிறிது காலம் அவர்களுக்கு ஒருவகைக் கசப்பு இருந்தது. உன் தூய்மையான காதல் வெற்றி பெற்றுவிட்டது. இனி, எனக்கு நிம்மதிதான்” என்றார் பூபதியார்.
“இதற்குள் நிம்மதி எப்படி அப்பா ஏற்பட்டுவிடும். பதினாயிரம் தூண்களும் தயாராக வேண்டாமோ?” என்று மல்லிகா கேட்டாள்.
நலந்தாவுக்குப் புதுக்கூடம் அமைக்கும் பணியில், அப்போது பூபதியார் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். பதினாயிரம் செம்மரத் தூண்கள் சித்திர வேலைப்பாடுடன் தயாராகிக் கொண்டிருந்தன. அவைகளைச் செய்வதிலேயே, மகிழ்ச்சி ஊற்றெடுத்தது பூபதியாருக்கு; பண்டிதர் பகையை நீக்கிக் கொண்டது மேலும் மகிழ்ச்சி அளித்தது.
பண்டிதர் அடிக்கடி சென்று, செம்மரத் தூண்களின் அழகினைக் காண்பார்!
நிலவொளியில் பார்க்கும்போது நேத்திரானந்தமாக இருக்கிறது என்பார்.
பூபதியாருக்கு, பண்டிதர் மேலான குணம் கொண்டார் என்பதால், பூரிப்பு; பெருமையுங்கூட.
செம்மரத் தூண்கள் நலந்தா போய்ச் சேர்ந்துவிட்டன! அவைகளை அமைப்பதற்கான, சிற்பிகள் புறப்பட்டனர். தன் ‘சேவை’யின் பூர்த்தியை எண்ணி, பூபதியார் களிப்புற்றிருந்தார்.