பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

முறையாகக் கட்டி, அவனையும் சாட்சிகள் முதலானவர்களையும் கொண்டுபோய், மகாராணி சமுகத்தில் விட்டார்கள். மகாராணி சாட்சிகளைப் பார்த்து "மங்களாகாரம் பிள்ளை கொலை செய்தது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்க, அவர்கள் தங்களுக்கு யாதொன்றும் தெரியாதென்றும், ஆனால் அரசனுடைய ஆக்கினைக்குப் பயந்து தங்களுக்குத் தெரிந்தது போல் பொய் வாக்குமூலம் எழுதி வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

உடனே இராக்கினி, தன் தம்பியைப் பார்த்து, "நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்க, அவன் இராணியைக் கூட மதிக்காமல், சகோதரி என்கிற தைரியத்தால், அலட்சியமாக மறுமொழி சொன்னான்; மகாராணிக்கு அடங்காத கோபம் உண்டாகி, கிங்கரர்களைப் பார்த்து "இவனை நான் உன்னத ஸ்தானத்தில் வைத்திருக்க, அந்த ஸ்தானத்துக்குத் தன்னை அபாத்திரன் ஆக்கிக் கொண்டபடியால், இவனை உன்னத ஸ்தானத்தினின்றே தள்ள வேண்டியது நியாயமாயிருக்கிறது. ஆகையால் இவனைத் தாயுமானஸ்வாமி மலைச் சிகரத்தின் மேலே ஏற்றி, அங்கே இருந்து கீழே தள்ளிவிடுங்கள்" என்று உத்தரவு கொடுத்தாள். அந்தப் பிரகாரம் அவனை மலைமேல் ஏற்றித் தள்ளிவிட்டார்கள். அவனுடைய யோகமும், தேகமும், மோகமும் இவ்வகையாக ஒரு நிமிஷத்துக்குள் முடிவு பெற்றன. பிறகு மங்கம்மாள் தனது நியாயசபையில், மங்களாகாரம் பிள்ளைக்குப் பெரிய உத்தியோகம் கொடுத்து, அவனைக் குபேர சம்பத்து உடையவன் ஆக்கினாள். "என்றைக்கிருந்தாலும் பரஸ்திரீ கமனஞ் செய்கிறவர்களுடைய கதி அதோகதி, என்பதற்கு அந்தக் காமியப்ப நாயக்கனே சாட்சி. கற்புள்ள ஸ்திரீகள் மேன்மை அடைவார்கள், என்பதற்குக் கற்பலங்காரியே சாட்சி" என்று என் தாயார் சொல்லி முடித்தார்கள். இந்தச் சரித்திரத்தைக் கேட்டு, நானும் ஞானாம்பாளும் அளவற்ற வியப்புங் களிப்பும் அடைந்தோம்.