பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கம்மாள்‌ நீதிமுறைமை

61


9-ஆம் அதிகாரம்
இம்மை மறுமைப் பற்றிய
விடுகதையும், அதன் பொருளும்

கருணானந்தம் பிள்ளை தன் மகளையும் மருகமனையும்
நம்பி மோசம் போன சரித்திரம்

ஒருநாள் எங்கள் உபாத்தியாயர் ஒரு விடுகதை சொல்லி, எங்களை விடுவிக்கும்படி சொன்னார். அஃது என்னவென்றால்:- "இங்குண்டு அங்கில்லை; அங்குண்டு இங்கில்லை; இங்கும் உண்டு; அங்கும் உண்டு; இங்கும் இல்லை; அங்கும் இல்லை" என்பது தான். உடனே நான் இங்குண்டு அங்கில்லை என்பதற்கு, ஒருவன் ஆஸ்திவந்தனாயிருந்து புண்ணியஞ் செய்யாமலிருப்பானானால், அவனுக்கு இந்த உலகத்தில் மட்டும் சுகமே தவிர, அந்த உலகத்திலே சுகமில்லை என்றும், "அங்குண்டு இங்கில்லை" என்பதற்கு ஒருவன் தரித்திரவானாயும், புண்ணியவானாயும் இருப்பானால், அவனுக்கு மறுமையிலே சுகமே தவிர இம்மைச் சுகம் இல்லையென்றும், "இங்கும் உண்டு அங்கும் உண்டு" என்பதற்கு, ஆஸ்தியும் தர்மமும் உடையவனுக்கு இகபரம் இரண்டிலும் சுகமென்றும், "இங்கும் இல்லை அங்கும் இல்லை" என்பதற்குச் செல்வமும் இல்லாமல், புண்ணியமும் இல்லாமல் இருப்பவனுக்கு இவ்வுலகத்திலும் சுகமில்லை, பரலோகத்திலும் சுகமில்லை என்றும் பொருள் விடுவித்தேன்.

இதைக் கேட்டவுடனே உபாத்தியாயர் என்னைப் பார்த்துச் சொல்லுகிறார். "அந்த விடுகதைக்கு நீ சொன்ன அர்த்தம் தகுதியானதுதான். ஆனால், அதில் சில காரியங்களைக் கவனிக்க வேண்டியது முக்கியம். இகலோக சுகத்தை அநுபவிப்பதற்குக் கூடச் செல்வப் பொருள் மட்டுமே