பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

பிரதாப முதலியார் சரித்திரம்

போதாது. செல்வத்துடன் புண்ணியமும் சேர்ந்திருக்க வேண்டியது முக்கியம். சில ஆஸ்திவந்தர்கள், தாங்களும் அநுபவியாமல் பிறருக்கும் உபகாரஞ் செய்யாமலும், பொருள்களைப் பூட்டி வைத்துக் கொண்டு லோபஞ் செய்கிறார்கள். அவர்களுக்கு இகத்திலும் பரத்திலும் என்ன பாக்கியம் உண்டு? இன்னும் சிலர், எவ்வளவு தனம் இருந்தாலும் திருப்தி அடையாமல், மேலும் மேலும் ஆசைப்பட்டு நித்திய தரித்திரர்கள் போல் துக்கத்தை அநுபவிக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகத்தில் என்ன சுகம் உண்டு? இன்னும் பல ஆஸ்திவந்தர்கள் பரஸ்திரீ கமனம், சூது, மதுபானம், பரஹிம்ஸ முதலான துர்விஷயங்களில் பொருளைச் செலவழித்துப் பல வியாதிகளையும், துன்பங்களையும், அபகீர்த்தியையும், பாவத்தையும், நரகத்தையும் சம்பாதித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய தனம் அவர்களுக்குக் கேடாக முடிந்ததே தவிர, நன்மையைக் கொடுக்கவில்லை. ஆகையால், இம்மையின் சுகானுபவத்துக்குக் கூடப் புண்ணியம் அவசியமாயிருக்கின்றது. ஒருவன் ஏழையாயிருந்தாலும் பொய் புரட்டு இல்லாமல், தேகப் பிரயாசைப் பட்டுத் தன்னையும், தன்னை அடுத்தவர்களையும், சம்ரக்ஷித்துத் தெய்வ பக்தியும் தர்ம சிந்தையும் உள்ளவனாயிருப்பானால், அவனுக்கு இகத்திலும் பரத்திலும் என்ன குறை இருக்கின்றது?

தனம், உத்தியோகம், அதிகாரம் முதலிய செல்வங்கள் அற்பமாகவும், நிலை அற்றதாகவும், முன்னே நான் சொன்னபடி துன்பஹேதுவாகவும் இருக்கின்றன. அந்தச் செல்வங்களுக்கு அதிகாரிகளாலும், திருடர்களாலும், நெருப்பு முதலிய காரணங்களாலும் அநேக அபாயங்கள் உண்டு. பின்னும் வார்த்திக தசையிலும், நாம் வியாதியாயிருக்கும் போதும், அந்தச் சுகங்களை அநுபவிக்கச் சக்தி இல்லாதவர்களாய்ப் போகிறோம். நாம் இறந்த பிற்பாடு அந்தச் செல்வங்கள் கூட வருகிறது மில்லை.