பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இம்மை மறுமை விடுகதை

63

புண்ணியமோ வென்றால், நிலைமை உள்ளதாகவும், அந்நியரால் அபகரிக்கக் கூடாததாகவும், பர லோகத்திலும் நம்மைத் தொடர்ந்து வருவதாகவும் இருக்கின்றது. இந்த உலகத்திலே துன்பங்கலவாத சுகமில்லையாதலால், அந்த அற்ப சுகத்தை மதிக்காமல், புண்ணியப் பயனாகிய நித்திய சுகத்தை நாம் தேடவேண்டும்" என்றார்.

என்னுடைய உபாத்தியாயர் சொன்ன விடுகதையை என் தாயாருக்குத் தெரிவித்தபோது, என் தாயார் என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்:

"உன்னுடய உபாத்தியாயராகிய கருணானந்தம் பிள்ளையைச் சாதாரண மனுஷராக நினைக்க வேண்டாம். அவர் புத்தியிலும், நற்குணங்களிலும் சிறந்தவர். அவர் பெரிய திரவியவந்தரா யில்லாவிட்டாலும், அவர் வேண்டியமட்டில் ஒரு குறைவுமில்லாலமல், சில நிலங்கள், வீடுகள் முதலிய பூஸ்திதிகள் உடையவராயிருந்தார். அவருக்கு ஒரு பெண்ணைத் தவிர, வேறே சந்ததியில்லை. அந்தப் பெண்ணை மிகவும் அன்பாக வளர்த்து, அவளுக்குப் பக்குவ காலம் வந்தவுடனே, ஒரு தகுந்த புருஷனைத் தேடிக் கலியாணஞ் செய்வித்தார். அவருக்குச் சில காலத்துக்கு முன் க்ஷயரோகங் கண்டு, பிழைப்போமென்கிற நம்பிக்கை இல்லாமையினால், ஒரு மரண சாசனம் எழுதி வைத்தார். அதில் தமது சொத்துக்கள் முழுமையும் அன்று முதல் தம்முடைய மகளும், அவள் புருஷனும் அநுபவித்துக் கொண்டு தமக்கு உத்தரக் கிரியை செய்து தம்முடைய பெண்சாதியையும் சம்ரக்ஷித்து வருகிறதென்றும், சில விசை தாம் பிழைத்துக் கொள்கிற பட்சத்தில், தம்மையும் அவர்களே ஆதரிக்க வேண்டுமென்றும் நிபந்தனை செய்யப் பட்டது. அந்த மரணசாசனப்படி, சகல ஸ்திதிகளும் உடனே அவருடைய மகளுக்கும் மருமகனுக்கும் ஸ்வாதீனமாகி, மிராசும் அவர்கள் பெயரால்