பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

பிரதாப முதலியார் சரித்திரம்

பதிவாகி அநுபவிக்கத் தொடங்கினார்கள். பிற்பாடு தெய்வானுகூலத்தால் கருணானந்தம் பிள்ளை தேக சௌக்கியம் அடைந்து பிழைத்துக் கொண்டார். அவரையும் அவருடைய பத்தினியையும் சில நாள் மட்டும் அவர்களுடைய மகளும் மருமகனும் சம்ரக்ஷணை செய்து, பிற்பாடு அவர்களே வீட்டைவிட்டு வெளிப்படும்படியான விதமாகக் கொடுமையைச் செய்ய ஆரம்பித்தார்கள். கருணானந்தம் பிள்ளை மறுபடியுந் தம்முடைய சொத்தை அடைகிறதற்குப் பல பிரயத்தனங்கள் செய்தும், அவர் எழுதிவைத்த மரணசாசனமே அவருக்கு விரோதமா யிருந்ததால், அவருடைய பிரயத்தனம் பலிக்கவில்லை. அவரும் அவருடைய பத்தினியும் அன்ன வஸ்திரத்துக்கு மார்க்கமில்லாமல், மிகவுந் துன்பப் பட்டார்கள். அவர் யோக்கியரென்பதும், அவர் மருமகனை நம்பி மோசம் போனதும், சகலருக்குந் தெரியுமானதால், அவருக்குப் பொருள் உதவி செய்யவேண்டுமென்று பலர் நினைத்தார்கள். ஆனால் தேகத்தில் சக்தி உள்ளவரையில் உழைத்து ஜீவிக்க வேண்டுமே தவிர, யாசகத் தொழில் ஈனத் தொழிலென்பது அவருடைய சித்தாந்தமாகையால் அவர் பிறருடைய உதவியை அபேக்ஷிக்கவில்லை. என் தகப்பனாராகிய சந்திரசேகர முதலியாருக்கும் இவருக்கும் சினேகமானபடியால், அவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் இவர் வாடகைக்குக் குடியிருந்து கொண்டு, அவரிடத்தில் சொற்பத் தொகை கடன் வாங்கி முதலாய் வைத்து வியாபாரஞ் செய்து காலக்ஷேபம் செய்து வந்தார்.

அவர் இழந்துபோன சொத்து, மறுபடியும் அவருக்குச் சித்திக்கும்படி உபாயஞ்செய்யவேண்டுமென்று என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் யோசித்துக் கொண்டு, ஒரு நாள் அவரை அழைத்துச் சொன்னதாவது:- "ஒரு பெரிய பெட்டியில் நாலாயிரம் வராகன் வைத்துப் பூட்டி, அதை உம்முடைய வீட்டில் ரகசியமாகக் கொண்டுவந்து வைக்கிறோம். நீர் நாளைய தினம்