பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சகர்‌ அடைந்த ஏமாற்றம்‌

65

எங்களுக்கும், உங்களது மகள் மருமகன் முதலியோர்களுக்கும் விருந்து செய்வதாகச் சொல்லி யனுப்பும். உம்முடைய வீட்டில் நாங்கள் போஜனஞ் செய்து முடித்தவுடனே, நாங்கள் இருவரும் ஆளுக்கு இரண்டாயிரம் வராகன் வீதம் கடன் கொடுக்கும்படி உம்மைக் கேட்கிறோம். நீர் உடனே பெட்டியைத் திறந்து எங்களுக்குக் கடன் கொடுப்பது போல பாவனை பண்ணி, எங்களுடைய பணத்தை எடுத்து எங்களுக்குக் கொடுத்துவிடும். அதைப் பார்த்தவுடனே, உமது மகளும் மருமகனும் உம்மிடத்தில் இன்னமும் பொருளிருப்பதாக எண்ணி, அதையும் கிரகிப்பதற்காக உம்முடைய தயவைச் சம்பாதிக்கப் பிரயாசப் படுவார்கள்; அந்தச் சமயத்தில் அவர்கள் கையிலிருக்கிற மரண சாசனத்தை எப்படியாவது கைப்பற்றிக் கொள்ளலாம்" என்றார்கள். கருணானந்தம் பிள்ளை "உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்" என்றார். உடனே என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் ஒரு பெட்டியில் நாலாயிரம் வராகன் வைத்துப் பூட்டிக் கருணானந்தம் பிள்ளை குடியிருக்கிற வீட்டுக்கு ரகசியமாய் அனுப்பினார்கள். அவர் மறுநாள் தம்முடைய மகள் மருமகன் முதலானவர்கள் விருந்துக்கு வரும்படி சொல்லியனுப்பினார்; அவர் விருந்து செய்வதற்கு வகையேதென்று மகளும் மருமகனும் ஆச்சரியப். பட்டுக் கொண்டு அதையும் போய்ப் பார்க்கலாமென்று அவர் வீட்டுக்குப் போனார்கள். என் தகப்பனாரும் உன் தகப்பனாரும் விருந்துக்கு வேண்டிய சாமக் கிரியைகளை அனுப்பி, தங்களுடைய பரிசாகர்களைக் கொண்டு விருந்து செய்வித்து, அவர்களும் விருந்து சாப்பிடப் போனார்கள். விருந்து முடிந்தவுடனே என் தகப்பனார் எழுந்து, இரண்டாயிரம் வராகன் தமக்குக் கடன் கொடுக்க வேண்டுமென்று கருணானந்தம் பிள்ளையைக் கேட்டார். உன் தகப்பனாரும் இரண்டாயிரம் வராகன் கடன் கேட்டார்கள். கருணானந்தம் பிள்ளை ஒரு அறைக்குள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து, நாலயிரம் வராகன் எடுத்துக் கொண்டு வந்து கலகலவென்று கொட்டினார்.

5