பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சகர்‌ அடைந்த ஏமாற்றம்‌

67

சொன்னார். அவர் “உங்களையும் குறிக்கவில்லையே!” என்றாள். “ஆம் அந்த மரண சாசனத்தையும் கொண்டுவா”என்றார். அவள் ஒரு நிமிஷத்தில் பட்சி போல் பறந்தோடி, மரண சாசனத்தைக் கொண்டு வந்து தகப்பனுக்குக் காட்டினாள். அவர் “அதனைக் கிழித்துவிடு. நான் வேறே சாசனம் எழுதிக் கொடுக்கிறேன்” என்றார். அவள் அந்தச் சீட்டையும், சீட்டினால் வந்த பாக்கியத்தையும் கிழித்து நாசஞ் செய்துவிட்டாள். இவர் “நான் தகுந்தபடி எழுதி வைக்கிறேன். நீயும் உனது நாயகனும் இருட்டினவுடனே வந்து, அந்தப் பெட்டியை உங்கள் வீட்டுக்குக் கொண்டுபோங்கள்” என்றார். உடனே அவள் கம்பீர ஜன்னி கண்டவள் போல எழுந்து, புருஷனுக்குச் சந்தோஷச் சமாச்சாரம் சொல்வதற்காக ஓடினாள். இருட்டினவுடனே புருஷனும் பெண்சாதியும், அந்தப் பெட்டியைக் கொண்டு போவதற்காக வந்தார்கள். அது எத்தனை பேர் கூடினாலும் தூக்கக்கூடாத பளுவாயிருந்ததால், அநேகர் கூடி முக்கி முரண்டி, ஒரு வண்டியின் மேலே ஏற்றினார்கள். அதை வீட்டுக்குக் கொண்டுபோய் புருஷனும் பாரியும் பேராசையுடனே திறந்து பார்த்தார்கள். பெட்டிக்குள்ளாக மண்ணுங் கல்லும் நிறைக்கப்பட்டிருந்ததே தவிர, இரண்டு ஓடுகளும், இரண்டு கயிறுகளும் ஒரு காகிதத் துண்டுமிருந்தன. அந்தக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது என்னவென்றால்: “நீங்கள் என் வாயில் மண் போட்டபடியினாலே, உங்களுடைய வாயிலே போட்டுக் கொள்வதற்காகப் பெட்டியில் மண் வைத்திருக்கிறேன். நீங்கள் என்னைப் பிச்சை எடுக்கும்படி விட்டுவிட்ட படியால் நீங்கள் பிச்சை எடுக்கும்படி இரண்டு ஓடுகள் வைத்திருக்கிறேன். பிச்சை எடுக்க உங்களுக்குச் சம்மதம் இல்லாவிட்டால், நீங்கள் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு சாகும்படி கயிறும் வைத்திருக்கிறேன்” என்பதுதான். இதைப் பார்த்தவுடனே, அவர்களுடைய ஸ்திதி எப்படி யிருந்திருக்கும் என்பதை