பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பிரதாப முதலியார் சரித்திரம்

நான் சொல்லவும் வேண்டுமா? கருணானந்தம் பிள்ளை செய்தது சரிசரியென்று அவர்களுடைய மனமே பறையடிக்க ஆரம்பித்தது. மரண சாசனம் பரிகரிக்கப் பட்டுப் போனதால், என் தந்தையால் தம்முடைய ஆட்களைக் கொண்டு, பூஸ்திதிகளையெல்லாம் கருணானந்தம் பிள்ளை வசப்படுத்தி விட்டார். அவருடைய மகளுக்கும் மருமகனுக்கும் ஆதாரமாயிருந்த மரண சாசனமே, மரணமாய்ப் போய்விட்டபடியாலும், அதிகாரிகளெல்லாம் நியாய பக்ஷத்திலே இருந்தபடியாலும் அவர்கள் மறுபடியும் அந்தச் சொத்தை அபகரிக்கிறதற்குச் செய்த பிரயத்தனங்கள், நிஷ்பலமாய்ப் போய்விட்டன. மகளும் மருமகனும் புத்தி கெட்டுப் போவதற்கு இந்தச் சொத்துத் தானே காரணமாயிருந்ததென்று, கருணானந்தம் பிள்ளைக்கு வெறுப்புண்டாகி, அவர் தமது குடும்ப சம்ரக்ஷணைக்கு வேண்டிய சொற்ப ஸ்திதிகளை வைத்துக் கொண்டு, மற்ற ஸ்திதிகளையெல்லாம் பல பாகமாய்ப் பிரித்துத் தம்முடைய எளிய சுற்றத்தார் முதலானவர்களுக்குத் தானஞ் செய்துவிட்டார். அவருடைய மகளும் மருமகனும் ஏழைகளாய்ப் போனதால், அவர்களையும் தம்முடைய குடும்பத்தில் சேர்த்துக் கொண்டு ஆதரித்து வருகிறார். மனுஷ தேகம் எடுத்தவர்கள், அவர்களாற் கூடிய பரோபகாரஞ் செய்ய வேண்டுமென்றும், பரோபகாரமில்லாதவர்கள் பூமிக்குச் சுமையென்றும் நினைத்து, அவருடைய வீட்டில் தர்மப் பள்ளிக்கூடம் வைத்துக் கொண்டு, எண்ணிக்கையில்லாத பிள்ளைகளுக்கு வித்தியா தானம் செய்து வருகின்றார். அப்படியே உனக்கும் ஞானாம்பாளுக்கும் தர்மத்துக்காக கல்வி போதிக்கிறாரேயல்லாது, யாதொரு பிரயோஜனத்துக்காக அல்ல. அவர் மகாத்மாவானதால், அவர் சொல்லுகிற ஒவ்வொரு புத்தியையும் ஒவ்வொரு மாணிக்கம்போல, உன்னுடைய மனதில் பதித்துக் கொள்” என்றார்கள். உபாத்தியாயர் சரித்திரத்தை நான் கேட்டபிற்பாடு, அவரிடத்தில் எனக்கு அதிக பூஜி-