பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பிரதாப முதலியார் சரித்திரம்

தால் கண்ணாடியும் நிஷ்களங்கமாயிருக்கும்" என்று சொல்லி ஒரு கண்ணாடியையும் அவன் கையில் கொடுத்தது. அவன் பல பல ஊர்களுக்குப் போய்ப் பல பெண்களைப் பார்த்து வேதாளம் சொன்ன குணங்குறிகளின்படி ஒரு மந்திரி மகளைச் சந்தித்தான். அந்த பெண்ணைப் பார்த்தவுடனே அவனுக்கே இச்சை உண்டானபோதிலும், அந்த இச்சையை நிக்கிரகஞ் செய்து, அந்த பெண்ணை வேதாளத்தின் முன்பாகக் கொண்டுபோய் விட்டான். வேதாளத்துக்கு அதிக சந்தோஷமுண்டாகி, அந்த ராஜகுமாரனைப் பார்த்து "நீ உன் ஊருக்குப் போய், நில அறையைத் திறந்து பார். அங்கே ஒன்பதாவது விக்கிரகத்தைக் காண்பாய்" என்றது. அவன் "அந்தப் பெண்ணை இழந்துவிட்டோமே" என்கிற துக்கத்துடன் ஊருக்குப் போய், நில அறையைத் திறந்து பார்த்தான். ஒன்பதாவது பீடத்தில் ஜகஜோதியாக ஒரு விக்கிரகம் இருந்தது. அதை நெருங்கிப் பார்க்க, இவன் வேதாளத்துக்குச் சம்பாதித்துக் கொடுத்த பெண்ணாயிருந்தது. உடனே அந்த வேதாளமும் ஆகாச மார்க்கமாய் வந்து "அந்தப் பெண் தான் ஒன்பதாவது விக்கிரகம். அவளை நீ விவாகஞ் செய்து கொண்டு சுகமாக வாழ்" என்று சொல்லி மறைந்து போய்விட்டது: அவன் பரம சந்தோஷம் அடைந்து, அந்த ஸ்திரீயை விவாகஞ் செய்துகொண்டு க்ஷேமமாயிருந்தான்.

"அந்தக் கதையில் சொல்லிய பிரகாரம் ஒருவனுக்கு உத்தம குணமுள்ள பாரி வாய்ப்பாளானால், அதற்குச் சமானமான செல்வம் வேறொன்றுமில்லை. ஞானாம்பாளை அந்த விக்கிரகமென்றே சொல்லலாம். அவளை உனக்கு விவாகம் செய்யும்படி சம்பந்தி முதலியாரைக் கேட்க யோசித்திருக்கிறோம். உன்னுடைய அபிப்பிராயம் என்ன?" என்று என் தாயார் கேட்டார்கள். இதைக் கேட்டவுடனே என் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கிக் கண் வழியாய்ப் புறப்பட்டு முகத்திற் பரவிற்று. நான் உடனே என் தாயாரைப் பார்த்து