பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பிரதாப முதலியார் சரித்திரம்

கூடினார்கள். நிச்சய தாம்பூலம் மாற்றுவதற்குமுன் சம்பந்தி முதலியார் என் பிதாவை நோக்கி "கலியாணத்துக்குப் பின்பு மாப்பிள்ளையும் பெண்ணும் ஆர் வீட்டில் இருக்கிறது?" என்று கேட்டார். உடனே என் தகப்பனார் "இந்த விஷயத்தில் உமக்கென்ன சந்தேகம் வந்தது? மாடு மேய்க்கிறவன் கூட மாமனார் வீட்டில் இருக்க மாட்டானே! என் பிள்ளை உம்முடைய வீட்டில் இருப்பானா?" என்றார். "அப்படியானால் பெண் கொடுக்கச் சம்மதமில்லை" என்று சம்பந்தி முதலியார் சொன்னார். "என் பிள்ளைக்குப் பெண் பஞ்சமா? உன் பெண் வேண்டியதில்லை" என்று என் பிதா மொழிந்தார். சம்பந்தி முதலியார் அவர் பாட்டன் காலமுதற் பிரபுவாகவும், என் தகப்பனார் அவருடைய தகப்பன் காலமுதற் பிரபுவாகவும் இருந்தபடியால், சம்பந்தி முதலியார் தம்மை ஒருபடி உயர்ந்தவராக எண்ணிக்கொண்டு, என் தகப்பனாரைப் பார்த்து "உன் பூர்வோத்தரம் தெரியாதா? உன் தகப்பனுடைய நாள் முதல்தானே நீ பிரபு; அதற்கு முன் உனக்கு ஜாதியேது?" என்று தூஷித்தார். அவரை என் தகப்பனார் "நீ அம்பட்டன் கோத்திரம் அல்லவா?" என்றார். இவரை அவர் "நீ வண்ணான் கோத்திரம் அல்லவா?" என்றார். இப்படியாக "அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிர்" என்பதுபோல் இவர்களுடைய சம்வாதத்தால் மறைந்து கிடந்த எங்கள் பூர்வோத்தரங்க ளெல்லாம் வெளியாகி விட்டன.

அப்போது எங்கள் பந்துக்களில் ஒரு விருத்தர் கூட இருந்தார். அவர் யதார்த்தவாதி: அவர் தகப்பன், பாட்டன் காலத்தில் ஒன்றுமில்லாமல் இருந்த காலத்திலே பிரபுவானவர். என் தகப்பனாரும் சம்பந்தி முதலியாரும் தகப்பனார் பாட்டனார் காலத்துப் பிரபுவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டபோது, அந்தக் கிழவனாருக்குக் கோபம் அதிகரித்து அவர்களை நோக்கிச் சொல்லுகிறார்: "நீங்கள் இருவரும் பிரபுக்கள் அல்ல.