பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணத்திற்கு இடையூறு

79

நான் தான் பிரபு. எவன் பிரபுவத்தைத் தானே சம்பாதிக்கிறானோ, அவன் பெரியவனேயல்லாமல், தகப்பன் பாட்டனிடத்திலிருந்து பிரபுவத்தைச் சுதந்தரிக்கிறவன் எப்படிப் பிரபு ஆவான்? எவன் சுத்த வீரனோ அவனுக்குப் பெருமையேயல்லாது, அப்பன் பாட்டன் சுத்த வீரர்களாயிருந்ததைக் கொண்டு ஒரு பேடிக்குப் பெருமை உண்டாகுமா? எவன் வித்வானோ அவனுக்கு மகிமையேயல்லாமல், அவன் பிள்ளை மூடனாயிருந்தால் அவனுக்கு வித்வான் என்கிற பட்டம் கிடைக்குமா? உங்கள் பாட்டனார் சம்பாதித்த ஆஸ்தி போய்விட்டால், ஒரு காசு முதலாய்ச் சம்பாதிக்க உங்களுக்குத் திறமையுண்டா? வித்தையும் புத்தியும் குணமும் உள்ளவன் தான் உயர்ந்தவனே தவிர அத்தன்மையில்லாதவன் தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்வது எப்படியென்றால், தூக்குண்ணும்படி தீர்மானிக்கப் பட்ட ஒரு கொலைகாரன் தூக்கு மரத்தின்மேல் நின்றுகொண்டு, தான் எல்லாரிலும் உயர்ந்தவனென்று சொல்வதற்குச் சமானம்" என்று அந்தக் கிழவனார் ஒரு பக்கத்தில் குறுக்கே யிறங்கிப்பேசத்தலைப்பட்டார். சம்பந்திகள் இருவரும் மரியாதைப்பன்மை போய், அவமரியாதைக்குரிய ஒருமையிலும், டகரப் பிரயோகங்களிலும் வாய்ச்சண்டையிலிருந்து கைச்சண்டையிலும் பிரவேசித்தார்கள். கைச்சண்டையிலிருந்து கத்திச் சண்டையில் பிரவேசிக்க யத்தனமாயிருந்தபோது, கூடியிருந்த பந்துக்கள் நயமான வார்த்தைகளைச் சொல்லி விலக்கிவிட்டார்கள். கடைசியில் சம்பந்தி முதலியார் "என் மகளை ஒரு நாய்க்குக் கொடுத்தாலும் கொடுப்பேனே யல்லாது உன் மகனுக்குக் கொடுக்கிறதில்லை" என்று சபதங் கூறினார். என் தகப்பனார் "என் மகனுக்கு ஒரு கழுதையைக் கொண்டாலும் கொள்ளுவேனேயன்றி, உன் மகளைக் கொள்ளுகிறதில்லை" என்று மார்பு தட்டிக் கொண்டு வந்துவிட்டார். இவ்வகையான எங்களுடைய கலியானம் நாய்ச் சம்பத்தத்திலும் கழுதைச் சம்பத்தத்திலும் முடிந்தது.