பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பிரதாப முதலியார் சரித்திரம்

அன்று முதல் சம்பந்தி முதலியாருக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமற் போய்விட்டது. அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போகிறதுமில்லை; எங்கள் வீட்டுக்கு அவர்கள் வருகிறதுமில்லை. அவர்களுடைய சிநேகிதர்கள் எங்களுக்கு விரோதிகள்; அவர்களுடைய பகைவர்கள் எங்களுக்கு இஷ்டர்கள். அவர்களுடைய வேலைக்காரர்களுக்கும் எங்கள் வேலைக்காரர்களுக்கும் பகை. அவர்களுடைய ஆடு மாடுகளுக்கும் எங்களுடைய ஆடு மாடுகளுக்கும் பகை. இப்படிப் பிரமாதமாகக் கலகம் மூண்டுவிட்டது. ஆனால் இந்தக் கலகத்தில் நானும் ஞானாம்பாளும், என் தாயாரும் அவள் தாயாரும், இந்த நாலு பேர் மட்டும் சம்பந்தப்படவில்லை. எங்கள் தாய்மார்கள் தங்கள் கணவர்களைச் சமாதானப்படுத்தக் கூடியவரையில் முயன்றும் பயன்படவில்லை.

சம்பந்தி முதலியார் தம்முடைய சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு, பல ஊர்களுக்குக் கடிதம் அனுப்பி, தன் மகளுக்கு மாப்பிள்ளை விசாரிக்க ஆரம்பித்தார். அதைக் கேட்டு என் தகப்பனாரும் பல ஊர்களுக்குக் கடிதம் போக்கி, எனக்குப் பெண் விசாரிக்கத் தொடங்கினார். ஞானாம்பாளைத் தவிர வேறே தேவ ஸ்திரீயாயிருந்தாலும் விவாகஞ் செய்கிறதில்லையென்றும், என் தகப்பனார் பிரயத்தனங்களுக்கு இடங் கொடுக்கிறதில்லையென்றும் எனக்குள்ளே நிச்சயித்துக் கொண்டேன். ஆனால் ஞானாம்பாள் ஸ்திரீ ஜாதி ஆனதால் அவளுடைய தகப்பனார் அவளுக்கு வேறே புருஷனைத் தேடி, பலவந்தமாய்க் கலியாணம் செய்துவிட்டால் என்ன செய்கிறதென்ற கவலை என்னை வாதித்தபடியால், அவளை ரகசியத்தில் எங்காவது அழைத்துப் போய் விவாகஞ் செய்துகொண்டு திரும்பி வருகிறதென்று தீர்மானித்துக் கொண்டு இந்தத் தீர்மானத்தை அவளுக்குக் கடித மூலமாகத் தெரிவித்தேன். நான் எங்கே கூப்பிட்டாலும், அவள் சந்தோஷமாக வருவாளென்றும் யாதொரு ஆக்ஷேபமும் சொல்ல மாட்டாளென்றும் நம்பி,