பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

பிரதாப முதலியார் சரித்திரம்

யிடுகிறதுந் தவிர, நியாய ஸ்தலங்களில் வரும் வழக்குகளிலும் அந்தத் தீமைகள் இன்னவையென்று நாம் அறிகிறோமல்லவா? அந்தத் துர்வழக்கத்தை இத்தேசத்துக்குக் கொண்டுவர யாராவது முயற்சி செய்வார்களானால், அவர்கள் தேசாபிமானிகள் அல்லவென்பது ஸ்பஷ்டம். பெரும்பாலும் தாய்தந்தைமார்கள், தங்களுடைய பிள்ளைகளின் நலத்தையே கருதுவார்கள். ஆகையால், தாய் தகப்பன்மார்களுடைய அபிப்பிராயப்படி நடப்பது உசிதமாயிருக்கின்றது. ஆனால் ஆடு மாடுகளுடைய சம்மதத்தைக் கேளாமல், அவைகளை விலை கூறுவது போல், தகுந்த வயது உள்ள பிள்ளைகளுடைய இஷ்டத்தை எவ்வளவும் மதியாமல் தாய் தந்தைமார்கள் தங்கள் இஷ்டப்படி நடத்த முயலுவார்களானால், அப்படிப்பட்ட விவாகத்துக்குச் சம்மதிக்காமல், நிராகரிக்கப் பிள்ளைகளுக்குப் பூரண சுதந்தரம் உண்டாயிருக்கின்றது. தங்களுக்குக் கன்னிகையாகிய நான் கடிதம் எழுதுவது அநுசிதமாயிருந்தாலும், என்னுடைய அபிப்பிராயம் தெரியும் பொருட்டு இந்தக் கடிதம் மட்டும் எழுதினேன். இனிமெல் எழுதமாட்டேன். தாங்கள் ஒருதரம் எனக்குச் செய்த உபகாரத்தையும் மறவேன்.

இங்ஙனம்
தங்கள் விதேயை
ஞானாம்பாள்

இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடனே, என்னுடைய புத்தி எந்த ஸ்திதியில் இருந்திருக்குமென்று நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள். இந்தக் கடிதத்தைத் திருப்பித் திருப்பி ஆயிரந்தரம் படித்தேன். நான் என்னுடைய கடிதத்தை எவ்வளவு நம்பிக்கையோடு கூட எழுதியிருந்தேனோ, அவ்வளவுக்கு அவளுடைய மறுமொழி முழுதும் பிரதிகூலமாயிருந்தது. என்னை விவாகஞ் செய்துகொள்ள அவள் சம்மதம் உள்ளவளென்பதுகூடச் சந்தேகத்தில் வந்துவிட்டது. ஆனால் தகுந்த பிராயமுள்ள பிள்ளைகளுடைய இஷ்டத்தைத் தாய் தகப்பன்-