பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

முதலியார் நிர்ணயித்தார். அதைக் கேள்விப்பட்ட என் தகப்பனாரும், அந்தத் தினத்தில் அந்த முகூர்த்தத்தில் என்னுடைய விவாகத்தை நிறைவேற்றுகிறதென்று நிர்ணயித்தார். அந்த கலியாணத்தைத் தடுக்க, என் தாயார் கூடியவரையில் பிரயாசப் பட்டார்கள். சம்பந்தி முதலியாருடைய வைராக்கியத்தினாலே என் தகப்பனாருடைய வைராக்கியமும் முற்றி என் தாயார் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போகவேண்டாமென்று என் தகப்பனார் கட்டுப்பாடு செய்துவிட்டபடியால் என் தாயார் தம்முடைய தமையனாராகிய சம்பந்தி முதலியாரைச் சமாதானப் படுத்தவும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது.

எங்கள் ஊருக்கு நாலுகாத வழிதூரத்தில் சம்பந்தி முதலியாருக்கும் எங்களுக்கும் பொதுவாக, பூங்காவூரென்கிற பெயருள்ள ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் இருக்கிற பெரிய மெத்தை வீட்டில் தென்பாதி அவருக்கும் வடபாதி எங்களுக்கும் சொந்தம். சம்பந்தி முதலியார் ஆரம்பித்த கலியாணத்திற்குப் பெண்கள் விவாதம் செய்வதால் உள்ளூரிலே கலியாணஞ் செய்யக்கூடாதென்றும், மேற்படி பூங்காவூர் கிராமத்தில் தம்முடைய பெண்ஜாதி வீட்டில் கலியாணம் செய்கிறதென்றும் நிச்சயித்து, அந்தக் கிராமத்துக்கே நேராய் வந்து சேரும்படி திருநெல்வேலி வீரப்ப முதலியாருக்குச் சம்பந்தி முதலியார் கடிதம் அனுப்பினார். அந்தச் சமாசாரம் என் தகப்பனார் கேள்விப்பட்டு, அவரும் அந்தக் கிராமத்தில் எங்களுடைய வடபாதி வீட்டில் என்னுடைய கலியாணத்தை நிறைவேற்றுகிறதென்று சங்கற்பித்துக் கொண்டு அந்தக் கிராமத்துக்கே பெண் வீட்டுக்காரர்கள் நேராய் வரும்படி கோயமுத்தூருக்குக் கடிதம் அனுப்பினார். சம்பந்தி முதலியார் கலியாணத்துக்கு வேண்டிய சில சாமான்கள் சேகரஞ் செய்து அந்தக் கிராமத்துக்கு அனுப்பினார். என் தகப்பனாரும் முக்கியமான தளவாட சாமான்களையும், அரிசி,