பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினையாத்‌ திருமணம்‌

85

பருப்பு, நெய் முதலிய புசிகரணங்களையும் அனுப்பினார். இருவரும் அந்தக் கிராமத்து வீட்டில், அவரவர்கள் பாதியில் பந்தல் போடும்படி திட்டஞ் செய்து அதுவும் முடிந்தது. இந்தக் கலியாண ஆடம்பரங்களையெல்லாம் பார்த்த உடனே ஞானாம்பாளை இழந்துவிட்டோமென்கிற துக்கம் அதிகரித்து, ஒரு தரித்திரன் நெடுங்காலந் தவஞ்செய்து பெற்றுக்கொண்ட திரவியத்தை மறுபடியும் இழந்து விட்டாற்போல அளவற்ற துக்கம் உடையவன் ஆனேன். இவ்வகையாக நான் மனங்கலங்கிக் கொண்டிருக்கும்போது, அந்தக் கலியாணத்துக்கு ஒரு இடையூறு சம்பவித்தது. அஃதென்னவெனில், கலியாணத்துக்கு எட்டுத் தினங்களுக்கு முந்தி சம்பந்தி முதலியார் வீட்டில் அவர் தாயாதிகளில் ஒருவர் இறந்துபோய்த் துக்கம் நேரிட்டு, அதனால் அந்தக் கலியாணத்தைத் தாமதப்படுத்தும்படி சம்பவித்ததால், மாப்பிள்ளை வீட்டார் இப்போது வரவேண்டாமென்று சம்பந்தி முதலியார் திருநெல்வேலிக்கு உடனே கடிதம் அனுப்பிக் கலியாணத்தை நிறுத்திவிட்டார். எங்களுக்கும் அந்தத் துக்கம் உண்டானதால் அந்த விவகாரத்தைக் கண்டு என் தகப்பனாரும் கோயமுத்தூருக்குக் கடிதம் அனுப்பி, தற்காலம் கலியாணத்தை நிறுத்திவிட்டு நிச்சிந்தையாயிருந்தார். கலியாணத்துக்கு முஸ்திப்புச் செய்யப் பூங்காவூருக்குப் போயிருந்த எங்கள் காரியஸ்தர்களும், துக்கம் விசாரிப்பதற்காகச் சத்தியபுரிக்குத் திரும்பிவந்து விட்டார்கள்.

கலியாணம் நிறுத்தலாய்ப் போன விஷயத்தைப்பற்றிக் கோயமுத்தூருக்கு எழுதிய கடிதம் போய்ச் சேர்ந்திருக்குமென்றும், பெண் வீட்டுக்காரர்கள் பயணத்தை நிறுத்தியிருப்பார்களென்றும் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். அப்படியிருக்க எங்களுடைய முந்தின கடிதப்படி பெண்வீட்டுக்காரர்களும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் பூங்காவூருக்கு வந்து அந்த முகூர்த்தத்தில் ஏதோ ஒரு கலியாணம் நடப்பிப்பதாக, எங்கே பார்த்தாலும்