பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பிரதாப முதலியார் சரித்திரம்

ஏகப் பிரஸ்தாபமாகப் பேசிக்கொண்டார்கள். நானாவது ஞானாம்பாளாவது அந்த ஊருக்குப் போகாமலிருக்கக் கலியாணம் எப்படி நடக்கக் கூடுமென்று நாங்கள் ஐயுறவுப் பட்டுக்கொண்டிருக்கும் போது, எனக்குக் குறிப்பிட்ட பெண்ணின் தகப்பனாராகிய சொக்கலிங்க முதலியார், முந்திக் குறிக்கப்பட்ட முகூர்த்த தினத்திற்கு மூன்று நாளைக்குப் பின்பு எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் ஒருவருக்கும் அறிமுகமில்லாதபடியால், அவரை “யார்” என்று என் தகப்பனார் வினவ, அவர் “நான் தான் கோயமுத்தூர் சொக்கலிங்க முதலி; பெரிய வீடென்று பிக்ஷைக்குப் போனால் கரியை அரைத்து மூஞ்சியில் தடவுவதுபோல் என்னை மோசஞ்செய்யலாமா?” என்று மிகவும் பரிதாபமாகச் சொன்னார். அதற்கு என் தகப்பனார் “துக்க நிமித்தம் கலியாணம் நின்று போன விஷயத்தைப் பற்றி உமக்குக் கடிதம் எழுதியிருந்தேன்; அது வந்து சேரவில்லையா?” என்றார். அதற்கு அவர், “அந்தக் கடிதம் வந்து சேரவில்லை. உங்களுடைய முந்தின கடிதப்பிரகாரம் நானும் பெண் முதலானவர்களும் புறப்பட்டு, முகூர்த்தத்திற்குச் சற்று நேரத்திற்கு முன் பூங்காவூருக்கு வந்து சேர்ந்தோம். அப்போது தான் திருநெல்வேலி வீரப்ப முதலியாரும், மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்களை எங்களுக்குத் தெரியாது; எங்களை அவர்களும் அறியமாட்டார்கள். அந்தக் கிராமத்திலிருக்கிற வீடு உங்களுக்கும் சம்பந்தி முதலியாருக்கும் பொதுவென்பதும், நீங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அந்த வீட்டில் ஒரே முகூர்த்தத்தில் இரண்டு கலியாணஞ் செய்ய யோசித்திருப்பதும் எங்களுக்குத் தெரியாது. மாப்பிள்ளையும் பெண்ணும் வந்து சேர்ந்தவுடனே அந்த மாப்பிள்ளை தான் என் பெண்ணுக்குக் குறிப்பிட்ட உங்கள் மகனென்று நான் எண்ணிக்கொண்டேன். என் பெண்ணைச் சம்பந்தி முதலியாருடைய பெண்ணென்று மேற்படி வீரப்ப முதலியாரும் எண்ணிக் கொண்டார். எங்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்த அவ்விடத்தில்