பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினையாத்‌ திருமணம்‌

87

வேறே மனுஷர்களில்லை. அந்த வீட்டில் கலியாணப் பந்தல் முதலிய சிறப்புகள் செய்யப்பட்டிருந்ததுமன்றி, போஜன பதார்த்தங்களும் சித்தமாயிருந்தபடியால் அந்தத் தினத்தில் முகூர்த்தம் நிச்சயந்தானென்று நினைக்கும்படியாயிருந்தது. உங்களுடைய அந்தஸ்துக்குத் தக்க அலங்காரம் இல்லாதிருந்தபோதிலும் பெண்களுக்குள்ளே கலகமென்று நீங்கள் எழுதியிருந்தமையால், அந்தக் கலகமே அலங்காரக் குறைவுக்குக் காரணமென்று நினைத்துக் கொண்டோம். முகூர்த்த நேரம் வந்துவிட்டதால் இனித் தாமதிக்கக் கூடாதென்று எங்களுடன் கூட வந்த புரோகிதப் பிராமணர்கள் ஒரு பக்கத்தில் அலப்பினார்கள். உங்களுடைய சம்பந்தங் கிடைப்பது அரிதாகையால் “அவசரக் காரனுக்குப் புத்திமட்டு” என்பதுபோல் நாங்கள் உடனே கலியாணத்தை ஆரம்பித்து அந்த மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் அந்த முகூர்த்தத்திலே விவாகம் நிறைவேற்றி, மாங்கல்ய தாரணமும் ஆய்விட்டது. பிற்பாடு, நானும் அந்த மாப்பிள்ளை வீட்டுக் காரர்களும், கலந்து யோக க்ஷேமங்களைப் பற்றிச் சம்பாஷிக்கத் தொடங்கினபோது, அந்த மாப்பிள்ளை இந்த ஊர்ச் சம்பந்தி முதலியார் பெண்ணுக்கு உத்தேசிக்கப்பட்ட மாப்பிள்ளையென்று எனக்கும், என் பெண் உங்களுடைய மகனுக்காகக் குறிக்கப்பட்ட பெண்ணென்று திருநெல்வேலி வீரப்ப முதலியாருக்கும் தெரிந்து நாங்கள் பட்ட கிலேசம் கடவுளுக்குத்தான் தெரியும். கலியாண வீடு துக்கவீடாகி நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழும்படியான ஸ்திதியில் வந்துவிட்டோம். ஏனென்றால் யுஅஷ்ட தரித்திரம் ஆத்தாள் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடுரு என்பது போல நானும் அந்த வீரப்ப முதலியாரும் பரம ஏழைகள். உங்களுடைய சம்பந்தத்தைப் பெரிதாக எண்ணி நான் வந்தது போலவே, இந்த ஊர்ச் சம்பந்தி முதலியாருடைய சம்பந்தத்தை விரும்பியே, வீரப்ப முதலியாரும் ஆவலுடன் வந்தார்.