பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பிரதாப முதலியார் சரித்திரம்

நாங்கள் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது. இனி என்ன செய்வோம்?” என்று சொக்கலிங்க முதலியார் துக்கலிங்க முதலியாராய்ப் புலம்பி அழுதார்.

இந்த வர்த்தமானங்களைக் கேட்டவுடனே, மரண தண்டனை அடையும்படி தீர்மானிக்கப்பட்ட ஒருவனுக்கு அந்தத் தண்டனை நிவர்த்தியானால் எவ்வளவு சந்தோஷம் உண்டாகுமோ, அவ்வளவு சந்தோஷத்தை அடைந்தேன். என் தந்தையாருக்குப் பெரிய ஆச்சரியமும் விசனமும் உண்டாயிற்று. என் தாயாருக்கு ஒரு பக்கத்தில் இரக்கமும், ஒரு பக்கத்தில் சந்தோஷமும் ஜனித்தன. உடனே என் தாயார் சொக்கலிங்க முதலியாரைப் பார்த்து “காரியம் முடிந்த பிற்பாடு இனி என்ன செய்யலாம்? நீங்கள் விசனப்பட வேண்டாம். நீங்கள் எங்களை நம்பிக் கோயமுத்தூரிலிருந்து இவ்வளவு தூரம் வந்துவிட்டபடியால், உங்களுக்கு நேரிட்ட வழிச் செலவு முதலியவைகளை ஒத்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லி என் தகப்பனாருடன் ஆலோசித்து, ஆயிரம் வராகன் சொக்கலிங்க முதலியாருக்குக் கொடுத்தார்கள்; உடனே அவர் திருப்தியாகிவிட்டார். அப்படியே வீரப்ப முதலியார் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய்க் காரியங்களைச் சொல்லி முறையிட்டுக் கொண்டதினால் அவருக்கும் ஆயிரம் வராகன் கிடைத்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம். இவ்வகையாக எனக்குக் குறித்த பெண்ணாகிய பூங்காவனத்துக்கும் ஞானாம்பாளுக்குக் குறித்த மாப்பிள்ளையாகிய சந்திரசேகர முதலியாருக்கும் முகூர்த்தம் நிறைவேறி, நானும் ஞானாம்பாளும் எங்கள் பூர்வ ஸ்திதிக்குக் குறைவில்லாமலிருந்தோம். என்னுடைய பிரமசாரித்துவமும் நீங்கவில்லை. ஞானாம்பாளுடைய கன்னிமையுங் கழியவில்லை. எங்களுக்கு நெடுங்காலம் அநுபந்தம் உள்ள சம்பந்தி முதலியாருடைய சம்பந்தத்தை நீக்கி, அந்நிய சம்பந்தஞ் செய்ய ஆரம்பித்தது, தெய்வத்துக்குச் சம்மதம் இல்லாதபடியால் அது தவறிப் போய்விட்டதாக என்