பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறை யெடுத்தவன்‌ முடிவு

95

வந்தார்கள். அவர்களைப் பார்த்த உடனே புலியைக் கண்ட பசு போல் நாங்கள் பயந்து பாதிப் பிராணனாய்ப் போய் விட்டோம். அவர்கள் வண்டிக்குப் பின்னே வந்து, என்னை உற்றுப் பார்த்து, எப்படியோ நான் தானென்று கண்டுபிடித்துக் கொண்டு, வண்டியை வடக்கே திருப்பச் சொல்லி வண்டிக்காரனை அடித்தார்கள். அந்தச் சமயத்தில் அத்தானும் அவருடைய சிநேகிதரும் குதிரைமேல் ஏறிக்கொண்டு தெற்கே இருந்து ஓடிவந்தார்கள். அவர்களை வெட்டுவதற்காக வடக்கே இருந்து வந்த இரண்டு குதிரைக்காரர்களும் கத்தியை உருவிக்கொண்டு நெருங்கினார்கள். உடனே அவர்கள் மேலே அத்தான் பிரயோகித்த குண்டுகள் பட்டு அவர்கள் கீழே விழுந்துவிட்டார்கள். பிற்பாடு நடந்த சங்கதிகளெல்லாம் அத்தானைக் கேட்டால் தெரியும் அந்தச் சமயத்தில் அத்தான் வந்து உதவாவிட்டால் என்னை மறுபடியும் நீங்கள் காணமாட்டீர்கள்” என்று ஞானாம்பாள் சொல்லி முடித்தாள்.




15-ஆம் அதிகாரம்
ஞானாம்பாளைச் சிறை யெடுத்தவன் வரலாறு

ஞானாம்பாள் என்னைப்பற்றிப் பிரஸ்தாபிக்கிறவரையில் என்னை ஒருவரும் கவனிப்பார் இல்லை. அவள் பிரஸ்தாபித்த மாத்திரத்தில் எல்லாருடைய கண்களாகிய வண்டுகள் என்னுடைய முகத் தாமரைமேலே மொய்க்க ஆரம்பித்தன. சம்பந்தி முதலியார் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு செய்த ஸ்தோத்திரங்களுக்கு அளவு சங்கியையில்லை. அவர் சந்தோஷத்தினால் என்னை எவ்வளவு