பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

பிரதாப முதலியார் சரித்திரம்

இறுகக் கட்டிப்பிடித்தாரென்றால், நான் மூச்சுவிட இடம் இல்லாமல் திக்குமுக்காட ஆரம்பித்தேன். நான் அவர் பிடித்த பிடியைத் திமிரிக்கொண்டு அவரைப் பார்த்து “ஞானாம்பாளைக் கொண்டு போனவர்கள் இன்னாரென்று தெரியவில்லை. வடக்கே இருந்து வந்து ரஸ்தாவில் ஞானாம்பாளை வளைத்துக் கொண்ட நாலு பேர்களில் குண்டுபட்டு விழுந்துவிட்டவர்கள் போக, மற்ற இரண்டு பேர்களையும் பிடித்துக் கட்டிக்கொண்டு வந்திருக்கிறோம். அவர்களை விசாரித்தால் உண்மை தெரியலாம்” என்று சொன்னேன். எல்லாரும் நான் சொன்னது சரிதான் என்று ஒப்புக்கொண்டு, அந்த இருவரையும் விசாரிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவன் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறான்; “நாங்களிருவரும் பூங்காவூர்த் தாசில்தாருடைய சேவகர்கள். அவர் இந்த அம்மணியினுடைய அழகையும் குணாதிசயங்களையும் கேள்விப்பட்டுத் தான் மணஞ்செய்துகொள்ள வேண்டுமென்று விருப்பமானார். அதைக் குறித்துத் தங்களுக்குப் பல கடிதங்கள் அனுப்பியும், தாங்கள் அநுகூலமான மறுமொழி அனுப்பாமையால், எப்படியாவது இந்தப் பெண்ணரசியைக் கொண்டுபோய் விவாகம் செய்கிறதென்று நிச்சயித்து, அதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். நீங்கள் இந்தக் கிராமத்துக்கு வந்திருந்து, மறுபடியும் உங்கள் ஊருக்கு நடுச்சாமத்திலே போகிறீர்கள் என்று அவர் கேள்வியுற்று எங்களையும் ஒரு பல்லக்கையும் அதி ரகசியமாய் அனுப்பி, எவ்விதத்திலும் இந்த மனோன்மணியைக் கொண்டுவரும்படி உத்தரவு கொடுத்தார். அந்தப்படி நாங்கள் நேற்றையத் தினம் பாதிச்சாமத்தில் வந்து சேர்ந்து இந்த வீட்டிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த அநேகம் பல்லக்குகளின் மத்தியில் நாங்கள் கொண்டுவந்த பல்லக்கையும் வைத்துவிட்டு மற்றவர்களைப் போல நாங்களும் படுத்துத் தூங்கினோம். விடிந்து போனால் எங்களுடைய மோசம் வெளியாகு மென்று நினைத்து இருட்டிலே பயணம் புறப்படும்-