பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

லோரும் புகழ ஆரம்பித்தார்கள். அந்த அம்மையை நோக்கி ““அம்மா நீங்கள் செய்தது பெரிய உபகாரம்; ஒருவரும் இப்படிப்பட்ட உபகாரஞ் செய்யமாட்டார்கள்; உலக நடை தெரியாத சில பெண்ணான ஞானாம்பாள், நடுக் காட்டில் உங்களிடத்தில் அடைக்கலம் புகுந்தது போல வேறே யாரிடத்திலாவது அடைக்கலம் புகுந்திருந்தால் அவளுடைய ஆபரணங்களை இச்சித்து அவளை ஜீவ வதை செய்திருப்பார்கள்; அல்லது அந்தத் தாசில்தாரிடத்தில் அவளை ஒப்பித்திருந்தாலும், அவன் தகுந்த வெகுமானஞ் செய்திருப்பான். அப்படிப்பட்ட ஆபத்துகள் இல்லாமல் ஞானாம்பாளை எங்களிடத்தில் நீங்கள் கொண்டுவந்து ஒப்புவித்தது பெரிய உபகாரம். இதற்கு நாங்கள் என்ன பிரதி உபகாரஞ் செய்யப் போகிறோம்?”” என்று வாழ்த்தினார்கள். அந்த ஆண்டிச்சி அம்மாள் நல்ல அந்தஸ்திலிருந்து மெலிந்து போனதாகச் சில குறிப்புகளால் தெரிய வந்தபடியால் அவளுடைய சரித்திரத்தைச் சொல்லும்படி வேண்டிக்கொண்டோம். அவள் எங்களைப் பார்த்து யுஎன்னுடைய சரித்திரம் மகா துயரத்துக்குரியது. நீங்கள் சந்தோஷமாயிருக்கிற இந்தச் சமயத்தில் என்னுடைய சரித்திரத்தைச் சொல்லி உங்களைத் துன்பத்துட்படுத்த எனக்கு மனமில்லை. ஆயினும் உங்கள் வேண்டுகோளின்படி என்னுடைய சரித்திரத்தைச் சொல்லுகிறேன்” என்று சொல்லத் தொடங்கினாள்.

“““நான் ஒரு தனவான் வீட்டில் பிறந்து தனவான் வீட்டிலே வாழ்க்கைப் பட்டேன்; நான் பிறந்த இடம் புதுவைமாநகர். புகுந்த நகர் பொன்னகரி. என் தாயார் இறந்தபிற்பாடு என் தகப்பனார் இதற்குப் பதினாறு வருஷத்திற்குமுன் இராணுவ வகுப்பில் தளகர்த்தாயிருந்த என்னுடைய அத்தை மகனுக்கு என்னைப் பாணிக்கிரகம் செய்து கொடுத்தார். எனக்குக் கலியாணமாகி நான் புருஷன் வீட்டுக்குப் போன உடனே,