பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

பிரதாப முதலியார் சரித்திரம்

இடத்திலே பேசினேனே தவிர, அந்நிய ஸ்திரீயிடத்தில் பேசவில்லையே‘ என்றார். இதைக் கேட்ட உடனே ’“அந்தச் சிறுக்கி உனக்கு இவ்வளவு” பேசக் கற்றுக்கொடுத்து விட்டாளா?’ என்று என் மாமி குதித்த குதிப்பும் ஆடின ஆட்டமும் சதுருக்கு விட்ட தேவடியாள் கூட ஆடமாட்டாள். என்னுடைய நாயகர் மானி ஆனதால் ஊர் சிரிக்கும் என்று பயந்து, ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டார். அன்று முதல் பல நாள் வரைக்கும் என் மாமியார் வாயும் நாத்தனார் வாயும் ஓயவேயில்லை. அவர்கள் என்னுடைய கொட்டத்தை அடக்க வேண்டுமென்று தீட்சித்துக் கொண்டு வேலைக்காரர்களையெல்லாம் தள்ளிவிட்டுச் சகல வேலைகளையும் நான் செய்யும்படி என் தலைமேலே சுமத்தினார்கள். என் பர்த்தாவுக்கு அமுது படைத்தல், தாம்பூலம் கொடுத்தல் முதலிய வேலைகளையும் நான் செய்கிறதாயிருந்தால், என்னுடைய சிரமங்களுக்கு ஒரு பரிகாரமாயிருக்கும். அந்த வேலைகளை எல்லாம் அவர்கள் வசித்துக் கொண்டு கஷ்டமான வேலைகளை எல்லாம் என் பங்கில் வைத்துவிட்டார்கள். எல்லோரும் சாப்பிட்ட பிறகு அவர்களுடைய உச்சிட்டத்துக்காக நான் காத்திருக்க வேண்டுமே அல்லாது, எனக்குப் பசித்தபோது சாப்பிடக்கூடாது. அந்த உச்சிட்டமும் பாதி வயிற்றுக்குக் கூட பற்றுகிறதில்லை. என் மாமியும் நாத்தியும் வந்த நாள் முதல் நானும் என் புருஷனும் பேசுவது குதிரைக் கொம்பாகிவிட்டது. நான் ஒரு பக்கத்திலும் அவர் ஒரு பக்கத்திலும் இருப்பதால், நாங்கள் ஒருவரை யொருவர் பார்க்கக் கூடாமலும், நயன பாஷைக்குக் கூட இடம் இல்லாமலும் போய்விட்டது. இராக்காலங்களில் என்னுடைய பர்த்தாவின் படுக்கை அறைக்குள் நான் பிரவேசிக்காதபடி, அந்த அறையின் வாசற்படி ஓரத்தில் தாயும் மகளும் படுத்துக் கொண்டு, ஒருவர் மாற்றி ஒருவர் பாராக் கொடுக்கத் தலைப்பட்டார்கள்.

”இவ்வளவு துன்மார்க்கங்களுக்கும் இடங் கொடுத்து என் கணவன் உபேக்ஷையா யிருப்பது