பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாமி நாத்திகள்‌ கொடுமை

103

எனக்கு மனவேதனையாயிருந்தாலும், அவர் மானத்துக்குப் பயந்து மௌனமாயிருக்கிறாரென்றும், அவருக்கு என்னிடத்திலிருக்கிற அன்பு குறையாதென்றும் எண்ணி நான் சகல கஷ்டநிஷ்டூரங்களையும் பொறுமையுடன் சகித்தேன். அப்படியிருக்க என் மாமியும் நாத்தியும் சில வியபசாரிகளை அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கும் என் பர்த்தாவுக்கும் சிநேகிதத்தை உண்டுபண்ணச் சர்வ பிரயத்தனஞ் செய்தார்கள். என்னுடைய கணவர் சொந்த ஸ்திரீயினிடத்திலே பேசக்கூடாதென்று விலக்கி, அந்நிய ஸ்திரீகளுடன் சகவாசஞ் செய்யும்படி முயற்சி செய்த என்னுடைய மாமியும் நாத்தியும் எப்படிப்பட்ட பொல்லாதவர்களாயிருக்க வேண்டுமென்று நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்! இந்தக் கொடுமைகளை எல்லாம் தூரதேசத்திலிருக்கிற என் தகப்பனாருக்கு நான் கடித மூலமாய்த் தெரிவித்தால் உடனே பரிகாரங் கிடைத்திருக்குமென்பதில் சந்தேகமில்லை. என் பாட்டனார் இறந்த பிறகு என் தகப்பனாரே அவருடைய தங்கையாகிய என் மாமியை வளர்த்து விவாகஞ் செய்து கொடுத்ததுந் தவிர அவள் விதந்துவான பிறகும் அவரே அவளையும் அவள் பிள்ளையாகிய என் பர்த்தாவையும் நெடுங்காலம் ஆதரித்து வந்தபடியாலும், அவர் துஷ்டகண்டகர் ஆனபடியாலும் அவரைக் கண்டால் கருடனைக் கண்ட பாம்பு போல் என்னுடைய மாமியும், நாத்தியும் அடங்குவார்களென்பது நிச்சயமே. ஆயினும் புருஷன் வீட்டில் நடக்கிற கொடுமைகளைத் தகப்பனுக்குத் தெரிவிப்பது பதிவிரதைகளுக்குத் தகுதி அல்லவென்றும், கலகத்துக்கும் ஆஸ்பதம் ஆகுமென்றும் நினைத்து, நான் என்னுடைய வருத்தங்களை எல்லாம் என் தகப்பனாருக்கு எழுதாமல் இருந்து விட்டேன். என்னுடைய வருத்தங்களை எல்லாம் என் புருஷனுக்கு எவ்வகையிலாவது தெரிவிக்கிறதென்று நிச்சயித்துக் கொண்டு ஒருநாள் நடுச் சாமத்தில் எல்லாரும் தூங்கின பிற்பாடு நான் எழுந்து சத்தஞ் செய்யாமல் என் பர்த்தாவின் படுக்கை அறைக்கு நேரே போனேன். அந்த அறை-