பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

பிரதாப முதலியார் சரித்திரம்

யின் வாசற்படி ஓரத்தில் இரண்டு காவற்காரிகளும் படுத்திருந்தார்கள். அவர்களுடைய காவலைக் கடந்து உள்ளே போகிறதற்காக அவர்கள் இருவரையும் ஒரே தாண்டாய்த் தாண்டினேன். உடனே என் சேலை தடுக்கி அடியற்ற மரம் போல அவர்கள் மேல் விழுந்து விட்டேன். அப்போது இருட்டாயிருந்ததால் அவர்கள் என்னைக் கையாலே தடவிப் பார்த்து நான் தான் என்று கண்டுபிடித்துக் கொண்டு என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் என்னைப் பிடித்த பிடியை விடாமல் அடித்தபடியால் நான் அடி பொறுக்கமாட்டாமல் நகத்தால் அவர்களைக் கீறினேன். அவர்கள் தங்களுடைய நகங்களால், தங்களைத் தாங்களே அதிகமாகக் கீறீவிட்டுக் கொண்டு, “கூ! கூ! எங்களைக் கொல்லுகிறாள்!” என்று கூவினார்கள். உடனே என் கணவர் விழித்துக் கொண்டு தீபத்துடன் எங்களிடம் ஓடி வந்தார். என்னைப் பார்த்தவுடனே “உன்னுடைய அறையை விட்டு இங்கே நீ ஏன் வந்தாய்?” என்று கேட்டார். நான் உண்மையான காரணத்தைச் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, கள்ளப் புருஷன் வீட்டுக்குப் போய் அகப்பட்டுக்கொண்டவள் போல விழித்தேன். அந்த நீலிகள் இருவரும் அவர்களுடைய காயங்களை என் புருஷனுக்குக் காட்டி என்னைப் பேய் பிடித்திருக்கிறதென்றும் அல்லது பைத்தியமாவது என்னைப் பிடித்திருக்க வேண்டுமென்றும் சாதித்தார்கள். என் கணவரும் அப்படியே அபிப்பிராயப்பட்டு என்னைத் தள்ளிக் கொண்டுபோய் என்னுடைய அறைக்குள்ளாக விட்டுக் கதவை இழுத்திச் சாத்தி வெளிப்பக்கத்தில் நாதாங்கி போட்டு விட்டார். நான் புருஷனைப் பார்க்கப் போய் இப்படி வந்து சம்பவித்ததே என்று நினைத்து, அந்த இரா முழுவதும் நான் அழுத கண்ணீர் அறை முழுதும் நிறைந்து விட்டது. மறு நாள் விடிந்த உடனே வைத்தியர்களும் மந்திரவாதிகளும் வந்து கூடிவிட்டார்கள். வைத்தியர்கள் எல்லாரும் எனக்குப் பைத்திய மென்று