பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத்துவர்‌ மாந்திரீகர்‌ கொடுமை

105

சாதித்தார்கள். மந்திரவாதிகள் எல்லாரும் எனக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று வாதித்தார்கள். அவர்களில் ஒருவன் என்னை நூற்றெட்டுப் பேய் பிடித்திருக்கிறதென்று சொன்னான். அதைக் கேட்டவுடனே என்னை அறியாமலே எனக்குக் கோபம் ஜனித்து அவ்விடத்திற் கிடந்த ஒரு கல்லை எடுத்து அவன் மேலே எறிந்தேன். என்னைப் பேய் பிடித்திருக்கிறதென்பதற்கு இது பிரத்தியட்சமான ருசு ஆகிவிட்டது. உடனே என்னைப் பிடித்துக் கைவிலங்கு கால்விலங்கு போட்டு என் தலையைச் சிரைத்து வைத்தியர்கள் ஒரு பக்கத்திலும் மந்திரவாதிகள் ஒரு பக்கத்திலும் எனக்குச் செய்த சித்திராக்கினிகளை விவரிக்க என்னுடைய ஒரு வாய் போதாது. நான் அவர்களைப் பார்த்து “ஒரு உயிருக்கு இத்தனை எமன்கள் வேண்டுமா? எனக்குப் பைத்தியமுமில்லை, பேயுமில்லை. என்னை வீணாக ஏன் வாதிக்கிறீர்கள்?” என்று அவர்களுக்கு இரக்கம் உண்டாகும்படி நான் நான் கற்ற வித்தைகளை எல்லாம் காட்டினேன். நான் சொல்வதெல்லாம் எனக்குப் பிரதிகூலமாய் முடிந்ததே தவிர யாதொரு அனுகூலத்தையுஞ் செய்யவில்லை.

நான் புருஷனோடு கூடியிருந்த காலத்தில் எனக்குக் கர்ப்பம் உண்டாகி, அப்போது எனக்குத் தெரியாமலிருந்து இப்போது சில கர்ப்பச் சின்னங்கள் தோன்றியபடியால் கர்ப்பிணியாயிருக்கிற எனக்கு மருந்துகள் கொடுப்பது சரியல்லவென்று வைத்தியர்களுக்குத் தெரிவித்தேன். நான் கர்ப்பிணியென்று தெரிந்தமாத்திரத்தில், என்னுடைய மாமியும் நாத்தியும் அவர்களுடைய புருஷர்கள் அன்றைக்குத் தான் இறந்தது போற் கரைகாணாத துக்க சாகரத்தில் அமிழ்ந்து முன்னையைப் பார்க்கிலும் நூறு மடங்கு அதிகமாக என்னைப் பகைக்க ஆரம்பித்தார்கள். என்னுடைய கர்ப்பம் அழியத் தக்க ஔஷதப் பிரயோகஞ் செய்ய அவர்கள் யத்தனமாயிருக்கையில் “‘ராக்ஷதனுக்கும் ஒரு புரோக்ஷதன் உண்டு’” என்பது போல, என் மாமியாரை அடக்கத் தக்க