பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

பிரதாப முதலியார் சரித்திரம்

சுவாமியார் ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் யாரென்றால் என்னுடைய தகப்பனார் தான். அவர் என்னுடைய அலங்கோலத்தைப் பார்த்த உடனே உள்ளங் கலங்கி என்னைக் கட்டிக் கொண்டு கதறினார். பிற்பாடு எனக்குப் பைத்தியமா அல்லவாவென்று நிச்சயிக்கும்பொருட்டு, என்னைப் பார்த்துப் பல கேள்விகள் கேட்டார். அவைகளுக்கு நான் தகுதியான மறுமொழி சொன்னதுந் தவிர, நடந்த காரியங்களை எல்லாம் அவருக்குச் சுருக்கமாகத் தெரிவித்தேன். என் மாமி நாத்திகளின் மேல் அதிகமாக ஒன்றுஞ் சொல்லாமல் தர்மக் கோளாக அவர்கள் செய்த இரண்டொரு காரியங்களை வெளிப் படுத்தினேன். எனக்குப் பைத்தியமுமில்லை பேயுமில்லை என்று என் தகப்பனார் கண்டுபிடித்துக் கொண்டு என் கைவிலங்கு கால் விலங்குகளை வெட்டிவிட ஆரம்பித்தார். உடனே என் மாமியார் ஓடிவந்து “அண்ணா, நீங்கள் செய்வதை யோசித்துச் செய்யுங்கள்; விலங்கை நிவர்த்தி செய்தால் அவள் யாரையாவது உபத்திரவஞ் செய்வாளே” என்றாள். இதைக் கேட்ட உடனே என் தகப்பனார் கோபாதிக்காரராய் என் மாமியாரை எட்டி உதைத்தார். அவள் எட்டுக் குட்டிக் கரணம் போட்டுக் கொண்டு கீழே விழுந்தாள். நான் உடனே என் தகப்பனார் காலைப் பிடித்துக் கொண்டு “எய்தவனை நோகாமல் அம்பை நோவதுபோல் எல்லாங் கடவுள் செயலாயிருக்க என் மாமியாரைக் கோபித்துப் பிரயோசனம் என்ன? நான் ஏதோ துஷ்கிருத்தியஞ் செய்ததற்காகக் கடவுள் என்னைத் தண்டித்தார்; என்னுடைய அத்தையை மொத்த வேண்டாம்” என்று பிரார்த்தித்தேன். அவர் உடனே என்னை நோக்கி, “அவள் ஆதியில் பெண் கேட்டபோது அவளுடைய துர்க்குணங்களைப் பற்றியே பெண் கொடுக்க நிராகரித்தேன். அவள் மறுபடியும் ஆயிரந்தரம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதினாலும், சகோதர பக்ஷத்தினாலும் கிளியை வளர்த்துப் பூனை கையிலே கொடுத்தது போல, உன்னை விவாகம் செய்து கொடுத்தேன். அதற்கு வந்த