பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போர்க்‌ களச்‌ செய்தி

109

ணீர் போல் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, என் புருஷனும் சண்டையில் காயப்பட்டு இறந்து போனதாகச் சமாசாரம் வந்தது. நான் உடனே நெருப்பில் விழுந்த புழுப்போல் துடித்துக் கீழே விழுந்து புலம்பி அழுதேன். அன்று முதல் நெடுநாள் மட்டும் நான் சித்தஸ்வாதீனமில்லாமலிருந்து பிறகு என் பந்துக்களுடைய முயற்சியால் சித்தப் பிரமை தீர்ந்து பிழைத்துக் கொண்டேன். நான் என்னுடைய புருஷனைப் பிரிந்து இப்போது பதினைந்து வருஷமாகிறது. எனக்குப் பிராணபதமான அந்த மூவரும் இறந்துபோயும், இறவாமலிருக்கிற என்னுடைய உயிர் எவ்வளவும் வல்லுயிராயிருக்க வேண்டும்? நானே என்னை மாய்த்துக் கொள்ளலாமென்று பல சமயங்களில் நினைத்தேன். ஆனால் தற்கொலை செய்வது பரம பாதகமென்றும் அதைச் செய்கிறவர்களுக்கு நரகம் பிராப்தியென்றும் பெரியோர்கள் சொல்லுகிறபடியால் நான் என் பிராணனை விடாமல் தாங்கிக் கொண்டு திரிகிறேன். என் மாதா பிதாக்களும், புருஷனும் பிள்ளையும் தர்மிஷ்டர்களானதால் அவர்கள் மோக்ஷ சாம்பிராச்சியம் அடைந்திருப்பார்களென்பது நிச்சயமே. அந்த இடத்துக்கு நானும் போய்ச் சேரவேண்டுமென்று சர்வ சதா கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். உலகத்தில் எனக்கு ஒரு அபேக்ஷையும் இல்லாதபடியால், என்னையும் ஒருவரும் விரும்பாதபடி ஆண்டிச்சி போல் வேஷம் பூண்டு கொண்டு இதற்குப் பத்து நாழிகை வழி தூரமான என் சிறிய தாயார் வீட்டில் வந்திருக்கிறேன். அதற்குச் சமீபமான ஒரு தனி மண்டபத்தில், நான் கடவுளை நோக்கித் தியானம் பண்ணிக் கொண்டிருக்கும்போது, மாதர் சிரோமணியாகிய ஞானாம்பாள் வந்து அடைக்கலம் புகுந்தாள். இது தான் என் சரித்திரம்” என்றாள்.

ஆண்டிச்சி யம்மாளின் சரித்திரத்தைக் கேட்டு அனுதாபப்படாதவர்கள் யாரும் இல்லை.