பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

பிரதாப முதலியார் சரித்திரம்

பிழைப்பேனென்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. நான் இறந்து போனதாகவும் எங்கும் பிரஸ்தாபமாகி விட்டது. நான் அந்தத் தடவை பிழைத்தது புனர்ஜன்மந்தான். நான் சண்டை முடிந்து திரும்பி வந்தவுடனே, கவர்ன்மெண்டார் என்னுடைய சௌரியத்தை மெச்சிக் கொண்டு எனக்குச் சேனாதிபதி உத்தியோகம் கொடுத்தார்கள். என்னுடைய பெண்சாதி பிள்ளைகளைப் பார்க்கும் பொருட்டு நான் உத்தரவு பெற்றுக் கொண்டு புதுச்சேரிக்குப் போனேன். அங்கே என் பிள்ளை காணாமற் போனதாகவும், அவனைத் தேடிக்கொண்டு போன என்னுடைய மாமனாரும் திரும்பி வரவில்லையென்றும் அந்தச் சமயத்தில் நான் இறந்து போனதாகச் சமாசாரம் வந்தபடியால் இவள் சித்தம் பேதித்து நெடுநாள் வியாதியாயிருந்ததாகவும் பிற்பாடு இவள் போன இடம் தெரியவில்லையென்றும் கேள்விப்பட்டு நான் பட்ட துயரம் இவ்வளவென்று சொல்லி முடியாது. நான் சண்டையில் மாண்டுபோகாமல் இந்தத் துக்கங்களை அனுபவிக்கவா வந்தேனென்று புலம்பிக் கொண்டு பல ஊர்களைத் தேடிப் பார்த்து வரும்போது, வழியில் எனக்கு இஷ்டமான ஒரு கலெக்டரைப் பார்க்கப் போனேன். அவர் தம்முடைய தாசில்தாரை நீங்கள் கொலை செய்துவிட்டதாகவும் நீங்கள் பலவான்களானதால் அனேகம் போர்வீரர்கள் சகிதமாய்ப் போய், உங்களைப் பிடித்து விசாரித்துச் சங்கதிகளைத் தெரிவிக்கும்படியாகவும் உத்தரவு கொடுத்தார். அதற்காக நான் வந்த இடத்தில் தேடிப்போன மருந்து காலில் அகப்பட்டதுபோல், என் பெண்சாதி அகப்பட்டாள். அவள் அகப்படுவதற்குமுன் யார் போனாலும் போகட்டும், பெண்சாதி அகப்பட்டால் போதுமென்று நினைத்தேன். அவள் அகப்பட்டபிறகு பிள்ளையும் மாமனாரும் அகப்படவில்லையே என்கிற ஏக்கம் பெரிதாயிருக்கிறது. மனுஷருடைய புத்தி ஒன்றிலும் திருப்தி அடைகிறதில்லை என்பதற்கு நானே சாட்சியாயிருக்கிறேன்“” என்றார்.