பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


18-ஆம் அதிகாரம்
ஆண்டிச்சி யம்மாளுக்கு அதிர்ஷ்டத்தின் மேல்
அதிர்ஷ்டம் சம்பவித்தல்

ஆண்டிச்சி யம்மாளுடைய புருஷனும் நாங்களும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு பெரியவரும் ஒரு யௌவனமான குமாரனும் உள்ளே வந்து நுழைந்தார்கள். அவர்கள் யாரென்றால் ஆண்டிச்சி அம்மாளுடைய தகப்பனாரும் பிள்ளையுந்தான். அந்த நால்வரும் சந்தித்த உடனே அவர்கள் பட்ட கிலேசமும் ஆநந்தமும் இப்படிப் பட்டது என்று விவரிக்க ஒருவராலும் கூடாது. இதுவரையில் பிரிந்திருந்த துக்கமும் பிறகு எப்படியாவது சந்தித்தோமே என்கிற ஆனந்தமும் கூடி ஒரு வீட்டில் ஒரு காலத்தில் துக்கமும் கலியாணமும் நடப்பது போல் ஆயிற்று. நாங்கள் அவர்கள் அழும்போது அழுகிறதும், அவர்கள் சந்தோஷிக்கும்போது சந்தோஷிக்கிறதுமாய் இருந்தோமே தவிர வேறு செயல் அற்றவர்களாயிருந்தோம். அந்த ஆதாளி அடங்கின பிற்பாடு நாங்கள் அந்தப் பெரியவரைப் பார்த்து “ஐயா! நீங்கள் பிள்ளையைத் தேடிக் கொண்டு போன பிற்பாடு நடந்த காரியம் என்ன?ரு என்று வினவ, அவர் சொல்லுகிறார்:—

““நான் என்னுடைய ஊரிலே பிள்ளையைத் தேடிக் கொண்டுபோனபோது ஒருவன் என்னைக் கண்டு “கடலோரத்தில் ஒரு பிள்ளையை ஒருவன் கப்பலுக்கு வரும்படி இழுத்துக் கொண்டிருந்தான். அந்தப் பிள்ளை போக மாட்டேனென்று அழுதுகொண்டிருந்தது” என்று எனக்குத் தெரிவித்தான். நான் உடனே சமுத்திரக் கரைக்கு ஓடினேன்; அவ்விடத்திலே பிள்ளையைக் காணாமையினால் ஒரு தோணியில் ஏறிப் போய்க் கப்பல் மேலே ஏறினேன். அங்கே இவன் என்னைப் பார்த்த உடனே ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு அழுதான்; அந்தக் கப்பல் திருட்டுக் கப்பலென்று பல அனுமானங்களால்