பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

பிரதாப முதலியார் சரித்திரம்

நிதானித்துக் கொண்டேன். கப்பலில் இருந்தவர்களைப் பார்த்து “இந்தப் பிள்ளையை ஏன் கொண்டுவந்தீர்கள்” என்று நான் கேட்க, அவர்கள் நேரான மறுமொழி சொல்லாமல் என்னை நிராகரித்துப் பேசினார்கள். நான் அவர்களைப் பார்த்து “இந்தப் பிள்ளை தரித்திருக்கிற ஆபரணங்களையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்; பிள்ளையை மட்டும் என் வசத்தில் விட்டுவிடுங்கள்” என்று தொழுதேன்; என் பேச்சு முடிவதற்கு முன்னமே கப்பல் ஓட ஆரம்பித்தது. உடனே அந்தக் கப்பல் கேப்டனிடத்தில் ஓடி அழுதேன். அந்தப் பாவிக்கும் இரக்கம் வரவில்லை; அந்தக் கப்பலில் இன்னும் அநேகர் பலவந்தமாக ஏற்றப்பட்டிருந்தார்கள்; நாங்கள் அழுத கண்ணீர்ச் சமுத்திரம் அந்தத் தண்ணீர்ச் சமுத்திரத்தை ஒத்தது. அவர்கள் பிள்ளைமேல் இருந்த ஆபரணங்களைக் கழற்றிக் கொண்டு, பல தீவாந்தரங்களுக்குப் போய்க் கடைசியாய் அமெரிக்காவில் எங்களை அடிமைகளாக விற்றுப்போட்டார்கள். அவ்விடத்தில் நாங்கள் பல பேர்களுக்கு அடிமைகளாகி, நாங்கள் பட்ட கஷ்டங்களை நீங்கள் கேள்விப்பட்டால் அழாமல் இருக்கமாட்டீர்கள். கடைசியாய் ஒரு ஐரோப்பியத் துரையை அநுசரித்து, அவருடைய உத்தியோக சாலையில் நான் ஒரு தகுந்த உத்தியோகத்தில் அமர்ந்து இந்தப் பிள்ளையையும் சம்ரக்ஷித்து அவனுக்கு வித்தியாப்பியாசமுஞ் செய்வித்தேன். அந்தத் துரையினுடைய தயவினாலே நாங்கள் மறுபடியும் கப்பலேறி புதுச்சேரித் துறைமுகத்தில் இறங்கி வீட்டுக்குப் போனோம்; அங்கே என் மகளைக் காணாமையினால் நாங்கள் உடனே புறப்பட்டுப் பல ஊர்களிலே தேடிக்கொண்டு அவளுடைய சிறிய தாயாருடைய வீட்டுக்கு வந்தோம்; என்னுடைய மகள், உங்களுடைய பெண்ணை அழைத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு நாங்களும் இவ்விடம் வந்தோம்; யுத்தத்துக்குப் போன என் மருமகன் திரும்பி வந்துவிட்டதாக நாங்கள் கேள்விப்பட்டிருந்தாலும் இங்கே அவரைக்