பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டிச்சி யம்மாள் தந்தையும் மகனும்

117

காண்போம் என்று நாங்கள் நினைத்து வரவேயில்லை; கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல், என்னுடைய மகளையும், மருமகனையும் உங்களுடைய வீட்டிலே பார்க்கும்படி லபித்ததால் என்னைப் போல பாக்கியசாலிகள் ஒருவரும் இருக்கமாட்டார்கள்”“ என்றார். உடனே அவர்களுடைய மருமகன் குதூகலத்துடனே எங்களைப் பார்த்து ““ஐயா! என் மாமனார் மீது எனக்கு ஒரு வழக்கு இருக்கின்றது; அது என்னவெனில் அதிக ரூபமும் யௌவனமும் உடைய ஒரு ஸ்திரீயையும் பால் குடிக்கிற பருவமுள்ள அருமையான ஒரு சிசுவையும் என் மாமனார் வசத்தில் நான் ஒப்புவித்துப் போயிருக்க, அவர் ஒரு ஆண்டிச்சியையும் ஒரு பெரிய பிள்ளையையும் எனக்குக் கொடுக்க வைத்திருக்கிறார்; இது தர்மமா?”“ என்று சிரித்தார். இவ்வகையாக அவர் மாமனாரைப் பரிகாசம் பண்ணிக்கொண்டிருக்கும்போது ஆண்டிச்சி அம்மாளை என் தாயார் கூப்பிடுவதாக ஒரு தாதி வந்து அழைத்துக்கொண்டு போனாள். உடனே என் தாயாரும் ஞானாம்பாள் முதலான ஸ்திரீகளும் ஆண்டிச்சி அம்மாளைப் பலவந்தமாய் ஸ்நான கட்டத்துக்குக் கொண்டுபோய்க் குளிப்பாட்டிப் பரிமள திரவியங்களைப் பூசித் திவ்யமான ஆடை ஆபரணங்களைத் தரிப்பித்து புருஷன் முன்பாகப் போகும்படி அவளை உள்ளே இருந்து தள்ளிவிட்டார்கள். அவளுக்கு முன் போல அழகு உண்டாகிவிட்டபடியால் அவள் இன்னாளென்று ஒருவருக்கும் அடையாளம் தெரியவில்லை. அந்த விருத்தர் மட்டிலும் தம்முடைய மகள்தான் என்று கண்டுபிடித்துக் கொண்டார். அவருடைய மருமகன் எங்களைப் பார்த்து ““இந்த அம்மா யார்?”” என்று வினவினார். உடனே இந்தக் கிழவனார், “என் மாப்பிள்ளை வெட்கமில்லாமல் என் பெண்சாதியை அம்மா என்கிறார்!” என்று கை கொட்டிச் சிரித்துப் பரிகாசஞ் செய்தார். பிற்பாடு அவர் எழுந்து தம்முடைய மகள் கையைப் பிடித்து மருமகன் கையில் வைத்து ‘“இப்போது இந்தப் பெண் உமக்குச் சம்மதமா? இல்லையா?’