பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

பிரதாப முதலியார் சரித்திரம்

என்றார். அவருடைய மருமகன் “பூரண சம்மதம்! பூரண சம்மதம்!” என்று பெண்சாதி கையைப் பற்றிக் கொண்டார். இவ்வகையாக கலியாண மகோற்சவம் போற் கொண்டாடிச் சந்தோஷித்தார்கள். அவர்களுக்கு நாங்கள் அன்றைய தினம் அறுசுவை பதார்த்தங்களுடனே விருந்து முதலிய உபசரணைகள் செய்து அவர்களுடைய சினேகிதத்தையும் சம்பாதித்துக் கொண்டோம். அந்த விருத்தரும் அவருடைய மருமகனும் எங்களை நோக்கி “நீங்கள் மகா புண்ணீயசீலர்களாகையால் உங்களுடைய வீட்டில் நாங்கள் நுழைந்த உடனே எங்களுடைய துக்கங்களெல்லாம் நீங்கி நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்படியான அதிர்ஷ்டசாலிகள் ஆனோம். நாங்கள் கப்பலை விட்டு இறங்கின உடனே எங்கள் எங்கள் வீட்டுக் காரியங்களைப் பற்றி யாதொரு ஒழுங்குஞ் செய்யாமல் ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டு சடுதியிற் புறப்பட்டு வந்துவிட்டதால் எங்களுடைய காரியங்களெல்லாம் அலங்கோலமா யிருக்கின்றன. நாங்கள் ஊருக்குப் போய்ச் சகல காரியங்களையும் சீர்ப்படுத்திக் கொண்டு, கூடுமானால் மறுபடி ஒரு பயணம் வந்து உங்களைத் தரிசிக்க அபேக்ஷிக்கிறோம்” என்று சொல்லி எங்களிடத்தில் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.



19-ஆம் அதிகாரம்
பிரதாப முதலியாரின் விவாக மகோத்சவம்
குணரத்தினம் என்னும் பெண்ணின் சரித்திரம்

அவர்கள் போன பிற்பாடு எனக்கும் ஞானாம்பாளுக்கும் அதி சீக்கிரத்தில் விவாகம் முடிக்க வேண்டு மென்று