பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணம்

119

சம்பந்தி முதலியார் அவசரப்பட்டார். அவருடைய துரிதத்தைப் பார்த்தால் அன்றையத் தினமே கலியாணம் முடிந்தாலும் அவருக்குச் சந்தோஷமாயிருக்குமென்று தோன்றிற்று. என்னுடைய மனோபீஷ்டமும் அப்படியே இருந்தது. ஆனால் என் தாய் தந்தைமார்கள் தூரத்திலிருக்கிற பந்து ஜனங்களும் தேவராஜப் பிள்ளை கனகசபை முதலானவர்களும் கலியாணத்துக்கு வரும்படியான சாவகாசத்தை யோசித்து முகூர்த்தம் நியமித்ததனால் கலியாணம் இருபது நாள் பிந்திப்போய் விட்டது. அந்த இருபது நாளும் இருபது யுகங்களைப் போல் இருந்தன. அந்தக் காலத்தைத் தொலைக்க என்னால் கூடியவரையில் பிரயாசப்பட்டும் தொலையவில்லை. தன்னுடைய இஷ்டப்படி கண்ட இடமெல்லாம் ஓடித் திரிகிற துஷ்டக்காளை வண்டியிற் கட்டின உடனே படுத்துக் கொள்வது போல, அதற்கு முன் அதி துரிதமாக ஓடிக்கொண்டிருந்த காலமானது இப்போது சுத்தமாய் அசையாமல் நின்றுவிட்டது. கடைசியாய் அந்தக் காலமும் முடிந்தது; ஞானாம்பாளுக்கும் எனக்கும் கலியாணமும் முடிந்தது. அந்தக் கலியாண மகோற்சவ வைபவத்தைப் பிறர் சொல்லவேண்டுமே அல்லாது நான் சொல்லிக்கொள்வது தற்புகழ்ச்சியாய் முடியும். அன்றியும் ஞானாம்பாளை நான் மாலை சூட்டப்பெற்ற பாக்கியத்தைப் பார்க்கிலும் மற்றக் கலியாண சம்பிரமங்கள் விசேஷமல்ல. ஆகையால் அவைகளை விவரிக்காமல் விட்டுவிடுகிறேன். தேவராஜப் பிள்ளையும் கனக சபை முதலானவர்களும் என் கலியாணத்திற்குக் கூட வந்திருந்து எண்ணிக்கை இல்லாத ஆடை ஆபரணங்களும் பாத்திர சாமான்களும் சம்மானம் செய்தார்கள். நாங்கள் அவர்களுக்குப் பதில் மரியாதையும் செய்தோம். நாங்கள் செய்தது அணுவாகவும் அவர்கள் எங்களுக்குச் செய்தது மலையாகவும் போய்விட்டது; அதனால் எங்களுக்கு வெட்கமுண்டாகி; அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பாகக் கனகசபை கலியாணத்தில் மரியாதை செய்கிற தென்று சங்கற்பித்துக்