பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணரத்தினம்‌ வரலாறு

121

யால் அவர்களும் கோயிலுக்குள்ளே புகுந்தார்கள். அந்தத் திருடன் “இனி மேல் எப்படியும் அகப்பட்டுக் கொள்வோம்; ஆயினும் ஒரு உபாயஞ் செய்து பார்ப்போம்” என்று நினைத்து அந்த ஐயனார் பேசுவது போல் தன் குரலை வேறுபடுத்திக் கொண்டு சொல்லுகிறான்: “ஓகோ! துஷ்டர்களே! இந்தப் பிள்ளைமேல் நமக்குக் கிருபை உண்டாகி அதை ஆசீர்வதித்துச் சகல வரப்பிரசாதங்களையும் கொடுத்து அனுப்பலாமென்று யோசித்து, நான் அந்தப் பிள்ளையைக் கொண்டுவந்திருக்க, அந்த உபகாரத்தை நீங்கள் எவ்வளவும் யோசிக்காமலும் தேக சுத்தி, இருதய சுத்தி இல்லாமலும் என்னுடைய ஆலயத்திலும் வந்து பிரவேசித்தீர்கள்! ஒரு நிமிஷத்தில் உங்கள் குடலைப் பிடுங்கி மாலையாய்ப் போட்டுக் கொள்ளுவேன்! ஆனால் அந்தப் பிள்ளைமேல் இருக்கிற கருணையால் உங்கள் குற்றத்தை க்ஷமிக்கிறேன்! அந்தப் பிள்ளையை இந்த இராத்திரி மட்டும் நீங்கள் விட்டுவிட்டுப் போனீர்களானால் அதற்குச் சகல அனுக்கிரகமும் செய்து வைத்திருக்கிறேன்; நீங்கள் பிராதக் காலத்தில் வந்து, பிள்ளையை எடுத்துக்கொண்டுபோகலாம்; இதற்கு நீங்கள் சம்மதிக்காவிட்டால் அந்தப் பிள்ளையையுங் கொன்று, உங்களயும் குலநாசஞ் செய்வேன்” என்றான். என் மைத்துனர் மூடபக்தி யுள்ளவரானதால் அந்தத் திருடன் சொன்னதைத் தெய்வ வாக்காக எண்ணி அந்த விக்கிரகத்தைச் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி “சுவாமி, தங்கள் சித்தப் பிரகாரம் அந்தக் குழந்தைக்கு அனுக்கிரகம் செய்தருளவேண்டும்” என்று மொழிந்து, தன்னுடைய ஆட்களையும் அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

“அவர்கள் போனபிற்பாடு அந்தத் திருடன் நகைகளையெல்லாம் ஒவ்வொன்றாகக் கழட்டிக்கொண்டு குழந்தையைக் கோயிலில் வைத்துவிட்டு வெளியே ஓடினான். அந்தக் கோயிற் பூசாரி வழக்கப்படி விடியற்காலத்திலே கோயிலுக்கு வந்து யாரோ திருடன்