பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

பிரதாப முதலியார் சரித்திரம்

ஓடுகிறானென்று துரத்தினான். அந்தத் திருடன் பெரிய கற்களை எடுத்து வீசினபடியால், அந்தக் கல்லடி பட்டுப் பூசாரி நின்று போனான். பிற்பாடு கோயிலுக்குள் அழுகிற குழந்தையைப் பார்த்து இது யாருடைய குழந்தையோவென்று பூசாரி ஆலோசித்துக் கொண்டிருக்கையில், என் மைத்துனர் முதலானவர்கள் குழந்தைக்கு இதுவரையில் அனுக்கிரகமாயிருக்குமென்று நினைத்துக் கோயிலுக்கு வந்து, பூசாரியைக் கண்டு இராத்திரி ஐயனார் திருவாய் மலர்ந்தருளியதைச் சொன்னார்கள். இதைக் கேட்டவுடனே, “கோயிற்பூனை தேவருக்கு அஞ்சாது” என்பது போல் அந்தப் பூசாரிக்கு அடக்கக் கூடாத பெருஞ்சிரிப்பு வந்துவிட்டது. அவன் சிரிப்பு முடிந்தபிற்பாடு என் மைத்துனரைப் பார்த்துத் தான் வரும்போது கோயிலுக்குள்ளிருந்து திருடன் வெளியே ஓடினதும் தான் துரத்திக் கொண்டு போனதும் அவன் கல்லால் வீசித் தன்னைக் காயப்படுத்தினதும் பரிஷ்காரமாய்த் தெரியப் படுத்திப் பின்னும் பூசாரி சொல்லுகிறான்:—

“உங்களைப் போலவே நானும் சில காலத்துக்குமுன் மோசம் போனேன். ஒரு நாள் சுவாமிக்குப் படைத்த அன்னம், பழம், தேங்காய் முதலான பிரசாதங்களை வழக்கப்படி எடுத்துக் கட்டிக்கொண்டு நான் வீட்டுக்குப் போக யத்தனப்பட்டபோது ஐயனார் விக்கிரகத்தினின்று ஒரு அசரீரி வாக்குப் புறப்பட்டது. அதென்னவெனில் “அடா! பாதகா! தினந்தோறும் எனக்குக் கொஞ்சமாவது வைக்காமல் பிரசாதங்கள் முழுதும் நீ கொண்டுபோய் விடுகின்றாயே! நான் எத்தனை நாளுக்குப் பசி பொறுப்பேன்? இனி நீ பிரசாதங்களைக் கொண்டுபோயானால் உன்னையே எடுத்துப் புசித்துவிடுவேன்—” என்றது. நான் இதைத் தெய்வ வாக்காக நினைத்து அன்றுமுதல் பிரசாதங்களைக் கொண்டு போகாமல் சுவாமி முன்பாக வைத்துவிட்டுப் போகிறது வழக்கம். மறு நாட் காலையில் அந்தப் பிரசாதம் இல்லாமலிருந்த