பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகசபை மணத்துற்குத்‌ தடை

123

தால் ஐயனார் புசித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு பிச்சைக்காரன் விக்கிரகத்துக்குப் பின்னே இருந்துகொண்டு ஐயனார் பேசுவதுபோற் பேசிப் பிரசாதங்களையும், தினந்தோறும் சாப்பிட்டு வந்ததாகச் சில நாளைக்குப் பிறகு தெரிந்து அவனையும் பிடித்துத் தகுந்த சிட்சையும் செய்தோம். அப்படியே ஒரு திருடன் உங்களையும் மோசஞ் செய்திருக்கிறான்” என்று பூசாரி சொன்ன பிற்பாடு என் மைத்துனருக்குப் புத்தி வந்தது. இந்தச் சமாசாரங்களெல்லாம் பிற்பாடு நான் கேள்விப்பட்டேன். அந்தக் குழந்தை வெகு நேரமாய்ப் பால் குடியாமலிருந்ததால் மிகுந்த பசி உண்டாகிக் களைத்துப்போய் விட்டது. அந்தக் குழந்தைக்குப் பால் கொடுத்து அது பிழைப்பதே அரிதாய்விட்டது. இதற்குச் சில வருஷங்களுக்குப் பின்பு என் மைத்துனர் இறந்துபோனார். என் தங்கைக்குப் புருஷ காபந்து இல்லாததனாலே அவள் கையிலிருந்த சொத்துக்களுடன் அவளும் அவளுடைய பெண்ணும் என் கிரஹத்துக்கு வந்து விட்டார்கள். அவளுடைய பூஸ்திதிகளையெல்லாம் நானே பராமரித்து வருகிறேன். கனகசபை ஜீவிப்பதிருப்பது எனக்குத் தெரியாமலிருந்த காலத்தில் அந்தப் பெண்ணுக்குத் தகுந்த வரன் தேடி விவாகம் செய்ய நிச்சயித்திருந்தேன் செங்கற்பட்டு ஜில்லா கலெக்டர் கச்சேரி சிரஸ்ததார் அந்தப் பெண்ணைக் கொள்ள விரும்பி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். நான் யோசித்து முடிவு சொல்கிறேனென்று பறுமொழி எழுதினேன். காணாமற்போன திரவியம் அகப்பட்டதுபோல் கனகசபை என்னிடம் வந்து சேர்ந்த பிற்பாடு அவனுக்கே அந்தப் பெண்ணைச் சுயம்வரம் செய்கிறதென்று நினைத்திருக்கிறேன். கனக சபையினுடைய கருத்தும் அந்தப் பெண்ணுடைய கருத்தும் அப்படியே இருப்பதாகப் பல குறிப்புகளாலே தெரிந்து கொண்டேன். இந்த விவரங்களெல்லாம் கண்டு மேற்படி சிரெஸ்ததாருக்குக் கடிதம் அனுப்பினேன். அவனுக்குப் பெண் கொடுக்க வில்லை என்கிற கோபத்தினால்