பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்ல பெண்கள்‌

129

மேற்படி திருஷ்டாந்தங்களை ஞானாம்பாள் சொன்னவுடனே ஸ்திரீகள் நல்லவர்களென்பதற்கு நானும் சில திருஷ்டாந்தங்கள் சொன்னேன்:—

““கொன்ராட் (Conrad) என்னும் சக்கரவர்த்தி ஒரு பட்டணத்தைப் பிடித்தபோது அதிலிருந்த புருஷர்களையெல்லாம் வெட்டிப்போடும்படியாகவும் ஸ்திரீகளையெல்லாம் அவர்கள் தூக்கக் கூடுமான ஆஸ்திகளை எடுத்துக் கொண்டு பட்டணத்தை விட்டுப் போய்விடும்படியாகவும் உத்தரவு கொடுத்தார். அநேக ஸ்திரீகள் தங்களுடைய புருஷர்களை முதுகின் மேலே தூக்கிக்கொண்டு நகரத்துக்கு வெளியே போவதை அந்தச் சக்கரவர்த்தி பார்த்து ‘ஆஸ்திகளை எடுத்துக்கொண்டு போகும்படி நாம் உத்தரவு கொடுத்திருக்க, புருஷர்களை ஏன் கொண்டு போகிறீர்கள்?’ என்று கேட்க ‘புருஷர்கள் தான் எங்களுக்கு ஆஸ்தி‘ என்று அந்த ஸ்திரீகள் சொல்ல அந்தச் சக்கரவர்த்திக்கு இரக்கமுண்டாகி, அந்த நகரத்துப் புருஷர்களை யெல்லாம் கொலை செய்ய வேண்டா மென்று உத்தரவு கொடுத்தார்.

இராணுவ வகுப்பைச் சேர்ந்த ஒரு உத்தியோகஸ்தர் அழகும் மேன்குலமுமுள்ள ஒரு ஸ்திரீயை விவாகஞ் செய்கிறதென்று நிச்சயித்த பிற்பாடு அவர் திடீரென்று யுத்தத்துக்குப் போகும்படி நேரிட்டது. அவர் திரும்பி வந்த பிற்பாடு கலியாணஞ் செய்வதாக வாக்குத் தத்தஞ் செய்து யுத்தத்துக்குப் போய்விட்டார். அந்தச் சண்டையில் அவர் குண்டுபட்டு நொண்டியாய்ப் போனதுந்தவிர தேகத்தில் காயங்களுண்டாகி அவர் சர்வ விகாரமாய்ப் போனார். இப்படிப்பட்ட ஸ்திதியில் அந்த ரூபவதி தன்னைக் கலியாணஞ் செய்யச் சம்மதியாளென்று அவர் மிகவும் துயரத்தை அடைந்திருந்தார். அவர் ஊருக்குத் திரும்பிவந்த உடனே அந்த ஸ்திரீயைப் பார்க்கிறதற்குக் கூட வெட்கப்பட்டுக் கொண்டிருந்து, பிற்பாடு

9