பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

பிரதாப முதலியார் சரித்திரம்

ஒரு நாள் அவளிடம் போய்த் தன்னை அந்த ஸ்திதியிற் கலியாணஞ் செய்யச் சம்மதமா என்று கேட்க, அவள் அவரைப் பார்த்து ‘“ஆடவர்களுக்குச் சௌரியமே அழகு; நீங்கள் சுத்த வீரர் என்பதற்கு உங்களுடைய காயங்களே சாக்ஷிகளாயிருப்பதால் உங்களை விவாகஞ் செய்ய ஒரு தடையுமில்லை”’ என்று உடனே சம்மதித்தாள்.

ஒரு திரவியந்தர் நெடு நாள் வியாதியாயிருந்து எழுந்திருக்கக் கூடாமல் அசக்தியாயிருந்த காலத்தில் அவருக்கு விரோதிகளான அநேக திருடர்கள் அவரைக் கொலை செய்யவும் சொத்துக்களைத் திருடவும் எண்ணங்கொண்டு ஒரு நாள் நடுச்சாமத்திற் பெருங் கூட்டமாய் வந்து அவர் வீட்டுத் தெருவாசற் கதவுகளைக் கோடாலியாற் பிளந்தார்கள். அவர்கள் திருடர்களென்று அவருடைய பெண்சாதி தெரிந்துகொண்டு புருஷன் படுத்திருக்கிற இடந் தெரியாமல் மறைத்துவிட்டுப் புருஷனுடைய உடுப்புகளைத் தான் தரித்து ரூபம் மாறிக்கொண்டு திருடர்களுக்கெதிரே போய் “உங்களுக்குப் புதையல் இருக்கிற இடத்தைக் காட்டிவிடுகிறேன்; என்னை உபத்திரவஞ் செய்ய வேண்டாம்” என்று சொல்ல அவர்கள் “புதையலைக் காட்டு! காட்டு” என்று பின் தொடர்ந்தார்கள். அவள் அவர்களை வெகு தூரம் அழைத்துக்கொண்டு போய் ஒரு பெரிய அறைக்குள் நுழைந்து அதில் விரித்திருந்த ரத்னக் கம்பளத்தைத் தூக்கி அதற்கடியில் தரையோடு தரையாகப் பூட்டப்பட்டிருந்த ஒரு இரும்புக் கதவைக் காட்டி அதைத் தூக்கி நிமிர்த்தும்படியாகச் சொன்னாள். திருடர்கள் பல பேர் கூடி அந்த இரும்புக் கதவைத் தூக்கி நிறுத்தினார்கள். அதற்கு அடியிலிருந்த படிகளின் வழியாய் அந்த ஸ்திரீயை முன்னே இறங்கச் சொல்லித் திருடர்கள் தீபங்களுடன் பின்தொடர்ந்து போனார்கள். அந்த நிலவறையில் பூட்டப் பட்டிருந்த அநேக இரும்புப் பெட்டிகளைக் காட்டி அவைகளுக்குள்ளாகத் திரவியங்களெல்லாம் இருப்பதாகத் தெரிவித்தாள். அவர்கள் ‘“திறவுகோல் எங்கே?’