பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்வரை வென்ற காரிகை

131

என்று கேட்க, அவள் “‘இதோ! ஒரு நொடியிற் கொண்டுவருகிறேன்’” என்று சொல்லி மான் ஓடுவதுபோல் அதிவேகமாய்ப் படிகளில் ஏறி வெளியே வந்து நிறுத்தப்பட்டிருந்த அந்த இரும்புக் கதவைக் காலே எட்டி உதைத்தாள். உடனே அந்தக் கதவு படீரென்று கீழே விழுந்து மூடிக்கொண்டது. அதன் பூட்டை ஒரு நிமிஷத்திலே பூட்டிவிட்டாள். திருடர்களெல்லாம் நில அறைக்குள்ளே அகப்பட்டுக் கொண்டார்கள். அவள் உடனே வீட்டுக்கு வெளியே ஓடிவந்து திருடர்களாலே கட்டப்பட்டிருந்த தன்னுடைய வேலைக் காரர்களை அவிழ்த்துவிட்டுக் கொஞ்ச தூரத்திற் குடியிருந்த தன் குடியானவர்களை அழைத்துவரும்படி ஆக்ஞாபித்தாள். அந்தப் பிரகாரம் இருநூறு குடியானவர்கள் வந்து திருடர்களைப் பிடித்துக் கட்டிக் குட்டையில் அடித்தார்கள். பிறகு அவர்களுக்குத் தகுந்த சிக்ஷையும் கிடைத்தது. அந்த ஸ்திரீ அவ்வளவு சாமர்த்தியம் செய்யாவிட்டால் திருடர்கள் அவளுடைய புருஷனையுங் கொன்று சர்வ கொள்ளை அடித்திருப்பார்கள்.

“இன்னும் அநேக ஸ்திரீகள் அந்நிய புருஷர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டு தப்புகிறதற்கு வேறே மார்க்கம் இல்லாமையினால் தங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டும் கிணற்றில் விழுந்தும் கத்திகளாற் கழுத்தை அரிந்துகொண்டும், இவ்வகையாகப் பிராணனைக் கொடுத்துக் கற்பைக் காப்பாற்றினார்களே! புருஷர்களோடு கூட உடன்கட்டை ஏறி மாண்டுபோன பதிவிரதிகளுக்குக் கணக்குண்டா?” என்றேன்.