பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

பிரதாப முதலியார் சரித்திரம்


21-ஆம் அதிகாரம்
துஷ்டப் புருஷனைத் திருத்தும் விதம்
அடங்காப் பாரியை அடக்கும் வகை

நான் ஞானாம்பாளைப் பார்த்து “உனக்கு ஒரு துஷ்டப் புருஷன் வந்து வாய்த்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்க, அவள் என்னை நோக்கி, “இதற்குமுன் ஒரு புண்ணியவதி நடந்து வழி காட்டி யிருக்கிறாள்; நானும் அந்தப் பிரகாரம் நடப்பேன்” என்றாள். “அது என்ன?” வென்று கேட்க ஞானாம்பாள் சொல்லுகிறாள்;

“ஒரு தனவானும் அவன் பத்தினியும் ஓர் உயிரும் இரண்டு உடலும் போல ஒருவருக்கொருவர் அதிக நேசமாகவும் பிரியமாகவும் நடந்து வந்தார்கள். கலியாணமாகிப் பத்து வருஷம் வரைக்கும், இவர்களைப் போல ஸ்திரீ புருஷர்கள் உண்டாவென்று யாவரும் சொல்லும்படியாகவும் அவ்வளவு அந்நியோன்னியமாகவும் மைத்திரமாகவும் வாழ்ந்தார்கள். பிற்பாடு சில துஷ்டர்களுடைய சகவாசத்தால் அந்த தனவானுடைய புத்தி மாறி, ஒரு சோர ஸ்திரீயினிடத்தில் ஸ்நேகம் செய்ய ஆரம்பித்தான். அவளுடைய ஸ்நேகம் அதிகரிக்க அதிகரிக்க, பத்தினியிடத்தில் அவனுக்கிருந்த பிரியம் குறையத் தலைப்பட்டது. அவன் போஜனத்துக்கு மட்டும் வீட்டுக்கு வருவதே தவிர மற்ற நேரமெல்லாம் வைப்பாட்டி வீடே அவனுக்கு வாசஸ்தலமாய்விட்டது. ‘வேண்டாப் பெண்ணாட்டி கால் பட்டால் குற்றம் கை பட்டால் குற்றம்’ என்பதுபோல் வைப்பாட்டியினுடைய கோளைக் கேட்டுக்கொண்டு, சொந்தப் பெண்சாதியைத் தாறுமாறாக நடத்தவும் ஆரம்பித்தான். அவன் என்ன கொடுமை செய்தாலும் அதையெல்லாம் சகித்துக்கொண்டு அவனுடைய பிரியத்தைப் பொறுமையினாலும் வணக்கத்தினாலும் மறுபடியும் சம்பாதிக்க அவளாற் கூடிய-