பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினி துயரம்‌

135

வைப்பாட்டி வீட்டுக்குப் போகிறவன் போலப் புறப்பட்டு வெளியே போய், சற்று நேரம் கண்மறைவாயிருந்து ஒன்பது மணி நேரத்திற்கு ஒருவருக்குந் தெரியாமல் தன் வீட்டுத் தோட்டத்துக்குள்ளாக வந்து படுக்கை அறைப் பலகணி ஓரத்தில் நிறுத்தப் பட்டிருந்த வண்டிக்குள்ளாக நுழைந்து ஆயுதபாணியாய் உட்கார்ந்திருந்தான். இந்த இடம் எந்தப் பக்கத்திலிருந்து யார் வந்தாலும் தெரியக்கூடியதாகவும், அறைக்குள்ளாக என்ன நடந்தாலும் பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அந்த அறையிலிருந்த கடிகாரம் பத்து மணி அடித்ததை இவன் கேட்டவுடனே கள்ளப் புருஷன் வருவானென்று நாலு பக்கத்திலும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒருவரும் வரவில்லை. அந்தக் கடிகாரம் பதினோரு மணியும் அடித்தது. அப்போதும் ஆண்பிள்ளை யென்கிற காற்றுக்கூட வீசவில்லை. அவனுடைய பத்தினியோ வென்றால் அவன் வெளியே போன நிமிஷமுதல் அந்த படுக்கை அறைக்குள் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய்க் கடவுளை ஜபித்துக்கொண்டிருந்தாள். அவள் இருந்த கோலத்தைப் பார்த்தால் தெய்வ பக்தி மேலிட்டு தேக பரவசமாக இருந்தாளே தவிர கள்ளப் புருஷனுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவளாகக் காணப்படவில்லை.

அவள் நெடுநேரம் தியான நிஷ்டையில் இருந்தபின்பு நித்திரை செய்து கொண்டிருந்த தன் பிள்ளையை எழுப்பிச் சாதம் ஊட்ட ஆரம்பித்தாள்; அந்தப் பிள்ளை சாப்பிடும்போது, ‘“ஏன், அம்மா அழுகிறீர்கள்?’” என்று கேட்க, அவள் ஒன்றுஞ் சொல்லாமலே சாதம் ஊட்டினாள். அந்தப் பிள்ளை மறுபடியும் சும்மா இராமல் “ஐயா போய்விட்டார்களென்றோ அழுகிறீர்கள்? அவர்கள் தான் உங்களை அடிக்கடி திட்டுகிறார்களே! அவர்கள் போனால் போகட்டுமே! நம்மை இரக்ஷிக்கிறதற்கு என் பாட்டனார் ஆகிய உங்கள் ஐயா இல்லையா?‘ மாமா இல்லையா?” என்றது. அவள் உடனே பிள்ளையைப் பார்த்து, “‘அப்படி