பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

பிரதாப முதலியார் சரித்திரம்

எல்லாம் பேசாதே; உன்னுடைய ஐயா போய்விட்டால் நம்மை ஒருவருந் தாங்க மாட்டார்கள்; உன்னுடைய ஐயா ஒரு குறைவுமில்லாமல் க்ஷேமமாயிருக்க வேண்டுமென்று சுவாமியைப் பிரார்த்தனை செய்” என்றாள். இதைக் கேட்டவுடனே வண்டியிலிருந்தவனுடைய மனம் இளகவும், அவனுடைய கண்ணில் ஜலம் பெருகவும் ஆரம்பித்தது. அந்தப் பிள்ளை சாப்பிட்டு முடிந்தவுடனே, வேலைக்காரி அந்த அறைக்குள் ஏதோ காரியமாக வந்து நுழைந்தாள். அவளைக் கண்டவுடனே அந்தப் பிள்ளை தன் தாயாரைப் பார்த்து, “இவள் நேற்றைய தினம் உங்களுடைய பெட்டியைத் திறந்தாள். நான் வெளியே இருந்து சன்னல் வழியாய்ப் பார்த்தேன்” என்றது. அவள் “நான் பெட்டியைத் திறக்கவே யில்லை” என்றாள்; உடனே அந்தப் பிள்ளை “நீ பெட்டியைத் திறக்கவில்லையா? ஏதோ சில கடிதங்களை அந்தப் பெட்டிக்குள் வைக்கவில்லையா?” என்றது. இதைக் கேட்டவுடனே அவளுடைய மனோசாட்சியும் குற்றஞ் சாட்ட ஆரம்பித்தபடியால் முன்னுக்குப் பின் விரோதமாக வாயில் வந்தபடி உளறினாள். அவளுடைய தலைவிக்குக் கடித விஷயமொன்றுந் தெரியாதானபடியால் காசு திருடத் திறந்திருப்பாளென்று நினைத்து “இனிமேல் நீ பெட்டியைத் திறந்தால் உன்னுடைய வேலையை இழந்துபோவாய்! ஜாக்கிரதையாயிரு” என்று கண்டித்தாள். கொலைக்கு ஆயத்தமாக வண்டியிலிருந்த தலைவன் இந்தச் சம்பாஷணைகளையெல்லாம் கேட்டவுடனே அவனுடைய சந்தேகம் ஓடவும் அவனுடைய கத்தி உறைக்குள் நுழையவும் ஆரம்பித்தது. ஆயினும் உண்மையை நன்றாக அறியவேண்டுமென்று அவன் சப்தப்படாமல் வண்டியை விட்டுக் கீழே குதித்து அந்தத் தோட்டத்தில் ஒரு மூலையிலே தனிமையாயிருந்த வேலைக்காரி வீட்டுக்குப் போனான். அவள் அப்போது தான் உள்ளே நுழைந்து அந்தப் பிள்ளையால் வெளியான துன்மார்க்கத்தை நினைத்து நினைத்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். எசமான் அவளைக்