பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுளை நம்பினோர்‌ கைவிடப்‌ படார்‌

137

கண்டவுடனே, கத்தியை உருவிக்கொண்டு “‘நீ ஏன் என் பெண்சாதிப் பெட்டியைத் திறந்தாய்? உண்மையைச் சொல்லாவிட்டால் இந்தக் கத்திக்கு இரை யாவாய்!”’ என்று பயமுறுத்தினான். அவள் உடனே கீழே விழுந்து அவனுடைய இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு அவனுடைய வைப்பாட்டி இரண்டு கடிதங்களைக் கொடுத்ததாகவும் அவைகளைத் தான் தன்னுடைய தலைவியின் பெட்டியில் வைத்ததாகவும் ஒப்புக்கொண்டாள். இதனைக் கேட்டவுடனே அவனுடைய சந்தேகம் நிவாரணமாகி பத்தினியிடம் போய் அவளைக் கட்டித் தழுவிக்கொண்டு நடந்த காரியங்களையும் தான் அவளைக் கொல்ல நினைத்ததையும் சொன்னான். உடனே ஸ்திரீ புருஷர்கள் சமாதானமாகி முன்னிருந்ததைக் காட்டிலும் அதிகப் பிரீதியாய் வாழ்ந்தார்கள். அன்று முதல் அந்தத் தனவான் சோர நாயகியினுடைய ஸ்நேகத்தை விட்டுவிட்டான். அந்தப் பதிவிரதாசிரோமணியைப் போல நற்குணங்களாலும் தெய்வ பக்தியினாலும் புருஷனுடைய பிரியத்தைச் சம்பாதிக்கப் பிரயாசைப்படுவதே உத்தமம்”” என்றாள்.

பிறகு ஞானாம்பாள் என்னைப் பார்த்து “உங்களுக்கு ஒரு கெட்ட பெண்சாதி வாய்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?ரு என்று கேட்டாள். “அவளை என்னாலே கூடியவரையில் சாந்தமாகவும் நயமாகவும் பேசித் திருத்தப் பிரயாசைப்படுவேன். அவள் திருந்தாமல் முரட்டுத்தனஞ் செய்வாளானால் அரபி தேசத்து ஆயிரம் இராத்திரிக் கதைகளில் ஒன்றிற் சொல்லுகிற பிரகாரஞ் செய்வேன்” என்றேன். அந்தக் கதையின் சுருக்கத்தைச் சொல்லவேண்டுமென்று ஞானாம்பாள் கேட்க நான் சொல்லத் தொடங்கினேன்.

”ஒரு ஆஸ்திவந்தனான வியாபாரிக்கு நாட்டுப்புறத்தில் அனேக வீடுகளும் கால்நடைகளும் இருந்தன. அவன் குடும்ப சகிதமாக ஒரு கிராமத்துக்குப் போய்,